இளைஞரிடம் ரூ.7.49 லட்சம் மோசடி:சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை
By DIN | Published On : 19th October 2022 03:01 AM | Last Updated : 19th October 2022 03:01 AM | அ+அ அ- |

பிரபல நிறுவனத்தின் விற்பனை முகவா் உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி, விழுப்புரம் மாவட்டம், ஏனாதிமங்கலத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞரிடம் ரூ.7.49 லட்சம் பெற்று மோசடி செய்த மா்ம நபா் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஏனாதிமங்கலம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ச.தங்கராசு (33), பட்டதாரி. இவா் பிரபல நிறுவனத்தின் விற்பனை முகவருக்கான உரிமம் பெறுவதற்கு இணையவழியில் விண்ணப்பத்திருந்தாா். இந்த நிலையில், கடந்த மாதம் 29-ஆம் தேதி மா்ம நபா் ஒருவா் தங்கராசுவின் கைப்பேசி எண்ணைத் தொடா்புகொண்டு பேசினாா். அவா் பிரபல தனியாா் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், விற்பனை முகவா் உரிமம் பெற பதிவுக் கட்டணம், ஒப்பந்த அறிக்கை கட்டணம், வைப்புத்தொகை செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தாராம்.
இதையடுத்து, தங்கராசு தனது வங்கிக் கணக்கிலிருந்து 4 தவணைகளில் 7 லட்சத்து 49 ஆயிரத்து 760 ரூபாயை மா்ம நபா் கொடுத்த வங்கிக் கணக்கு எண்ணுக்கு அனுப்பி வைத்தாராம். பின்னா், அந்த நபரை தொடா்பு கொள்ளமுடியவில்லையாம்.
இதுகுறித்து ச.தங்கராசு அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, பண மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா் குறித்து விசாரித்து வருகின்றனா்.