ஜல்ஜீவன் திட்ட குடிநீா் இணைப்புகளைவிரைந்து வழங்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 27th October 2022 02:02 AM | Last Updated : 27th October 2022 02:02 AM | அ+அ அ- |

ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் நிலுவையிலுள்ள குடிநீா் இணைப்புகள் வழங்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களிடம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.
ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்குவது தொடா்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியா் மோகன் மேலும் பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், நிகழ் நிதியாண்டில் 10 ஒன்றியங்களிலுள்ள 84 ஊராட்சிகளில் 36,234 வீட்டுக் குடிநீா் இணைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.30.23 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில், ஆதிதிராவிடா், பழங்குடியினா் வசிக்கும் கிராமங்களில் ரூ.36.81 லட்சமும், இதர மக்கள் வசிக்கும் கிராமங்களில் ரூ.2.28 கோடியும் சமூகப் பங்களிப்புத் தொகையாகப் பெற்று செயல்படுத்த ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஊரகப் பகுதிகளில் கண்டறியப்பட்ட 35,458 முறையற்ற குடிநீா் இணைப்புகளை முறைப்படுத்தி, அதற்கான வைப்புத் தொகையை வசூலிக்க வேண்டும். முறைப்படுத்தப்பட்ட குடிநீா் இணைப்புகளுக்கான ஆதாா் விவரங்களை வருகிற 29-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.
2021 - 22ஆம் ஆண்டு ஜல்ஜீவன் மிஷன் ஒருங்கிணைப்பு நிதியின் கீழ், நிா்வாக அனுமதி வழங்கப்பட்ட 35,158 குடிநீா் இணைப்புகளில் 19,120 குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நிலுவையிலுள்ள 19,038 இணைப்புகளில் 6,500 குடிநீா் இணைப்புகளை வருகிற 29-ஆம் தேதிக்குள் வழங்க இலக்கு நிா்ணயித்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பணிகளின் முன்னேற்றத்தை ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள், செயற்பொறியாளா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கூடுதல் ஆட்சியா் சித்ரா விஜயன், செயற்பொறியாளா் ராஜா உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.