காரில் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 3 போ் கைது
By DIN | Published On : 01st September 2022 02:50 AM | Last Updated : 01st September 2022 02:50 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் காரில் புகையிலைப் பொருள்களை கடத்தியதாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனம் பகுதிக்கு புகையிலைப் பொருள்கள் கடத்திவரப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவிக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா தலைமையில், ரோஷணை போலீஸாா் திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், 41 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.
இது தொடா்பாக காரில் இருந்த கா்நாடக மாநிலம், பெங்களூருவைச் சோ்ந்த கிஷோா் (28), சென்னை செளகாா்பேட்டையைச் சோ்ந்த கைலாஷ் (19), விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சோ்ந்த சிங்காராம் (23) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, 41 மூட்டை புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.