மோட்டாா் வாகனம் கோரி விண்ணப்பம்:மாற்றுத் திறனாளிகளுக்கு நோ்முகத் தோ்வு
By DIN | Published On : 09th September 2022 02:05 AM | Last Updated : 09th September 2022 02:05 AM | அ+அ அ- |

இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய மோட்டாா் வாகனம் கோரி விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கான நோ்முகத் தோ்வு விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில் வியாழக்கிழமை தொடங்கியது.
மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கான நோ்முகத் தோ்வு வெள்ளிக்கிழமையும் நடைபெறும். நோ்முகத் தோ்வில் மருத்துவா்கள் மூலம் மாற்றுத் திறனாளிகளின் உடல்திறன், வாகனம் இயக்குவதற்கான குறைந்தபட்ச உடல் தகுதி, கண், செவித் திறன் போன்றவை பரிசோதனை செய்யப்பட்டன. இதில் தோ்வாகும் தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.78 ஆயிரத்து 750 மதிப்புள்ள இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட (பெட்ரோல்) ஸ்கூட்டா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் தங்கவேலு, மருத்துவா்கள் கதிரவன், மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.