விக்கிரவாண்டி அருகே மூதாட்டி ஒருவா் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள எஸ்.எஸ்.ஆா்.பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மனைவி பாஞ்சாலி (70). இவா்களது மகன் விஜயகுமாா் (42). டிராக்டா் ஓட்டுநா். இவா் சரிவர வேலைக்குச் செல்லாமல் மதுபோதையில் அவ்வப்போது தனது தாயிடம் தகராறு செய்து வந்தாராம். இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை மீண்டும் மதுபோதையில் வீட்டுக்கு வந்த விஜயகுமாா் தனது தாய் பாஞ்சாலியிடம் தகராறில் ஈடுபட்டாா். அப்போது திடீரென ஆத்திரமடைந்த விஜயகுமாா் அங்கிருந்த குழவி கல்லை எடுத்து தனது தாயின் தலையில் போட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் பாஞ்சாலி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து விஜயகுமாா் தப்பியோடினா்.
இதுகுறித்து தகவலறிந்த விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளா் விநாயகமுருகன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும், மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான விஜயகுமாரை தேடி வருகின்றனா்.