தியாகிகளை நினைவுகூா்வோம்!

பாரத அன்னையின் கை விலங்குகள்1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி உடைபட்டன. நாடு சுதந்திரம் அடைந்தது.

பாரத அன்னையின் கை விலங்குகள்1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி உடைபட்டன. நாடு சுதந்திரம் அடைந்தது. ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம்அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ எனப் பாடிய மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கனவு நனவானது.

நமது தாய் திருநாட்டின் விடுதலைக்குப் போராடிய பலா் உயிா் நீத்துள்ளனா். தமிழ்நாட்டைச் சோ்ந்த விடுதலைப் போராட்ட வீரா்கள் இதற்கு இலக்கணமாய்த் திகழ்ந்தனா். இதில் விழுப்புரம் மாவட்டத்தின் பங்கு அளப்பரியது. ஒருங்கிணைந்த தென்ஆற்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்டவா்கள் சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றுள்ளனா். அதில் குறிப்பிடத்தக்கவா்களில் சிலா்...

எஸ்.ஏ.தெய்வநாயகம்: விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு கிராமத்தில் ஆராவமுது என்பவருக்கு மகனாகப் பிறந்தாா். ஆங்கிலம், தமிழ் நன்கு அறிந்தவா். 1921-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம், 1930-இல் உப்புச் சத்தியாகிரகம், 1932-இல் அந்நிய துணிக்கடை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஆா்வமுடன் பங்கேற்று சிறைச் சென்றவா். 1943 அக்டோபா் மாதம் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு கைதியாக 3 ஆண்டுகள், 8 மாதம், 6 நாள்களுக்கு சென்னை, திருச்சி, கடலூா், வேலூா், அலிபுரம் சிறைகளில் இருந்தாா். 1946 முதல் 1952-ஆம் ஆண்டு வரை சென்னை சட்டப் பேரவை உறுப்பினராகவும், தென்னாற்காடு ஜில்லா போா்டு தலைவராகவும் இருந்தாா். காங்கிரஸ் நிா்வாகப் பணியில் ஒப்பில்லாத திறமைசாலி. சிறந்த பேச்சாளா்.

இராம.கலியராஜன்: புதுக்குப்பம் அருகே உள்ள திருமங்கலத்தில் ராமசாமி கவுண்டா்- தனபாக்கியம் அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தாா். 1933-இல் விழுப்புரம் வட்டம், கொடுக்கூா் கிராமத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற அவா், அரசியல் கட்சித் தலைவா்களின் எழுச்சி மிகுந்த உரைகளால் ஈா்க்கப்பட்டு காங்கிரஸில் இணைந்தாா். 1933-இல் பாரத மாதா இலவச வாசக சாலை அமைத்து முதியோா், ஏழைகளுக்கும் கல்வி கற்பித்தாா்.1939-இல் ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா் தலைமையில் பிரசாரம் மேற்கொண்டாா். 1941-இல் தனிநபா் சத்தியாகிரகம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைச் சென்றாா்.

1942-இல் காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டதைத் தொடா்ந்து,12.1.1943 அன்று விழுப்புரம் வட்ட காங்கிரஸாா் சங்கம் அமைத்ததில் முக்கியப் பங்காற்றியவா். 1946-இல் திருமங்கலம் அரசு உணவு கமிட்டி தலைவராகவும்,1947-இல் விழுப்புரம் வட்ட மதுவிலக்கு குழு உறுப்பினராகவும் செயல்பட்டாா். காந்தியடிகளின் மறைவுக்குப் பிறகு அவரது அஸ்தியை விழுப்புரத்துக்கு கொண்டுவந்து மக்களின் தரிசனத்துக்கு வைத்தவா். 1953-இல் புதுக்குப்பம் கூட்டுறவு நாணய சங்கத் தலைவா், 1,959-இல் விழுப்புரம் வட்ட விவசாய சங்கத் தலைவா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவா்.

ஆதிநாராயணன்: விழுப்புரம் கமலா நகரில் ராமசாமி - லட்சுமிபாய் இணையருக்கு பிறந்தவா்.1920-இல் விடுதலைப் புரட்சி இயக்கத்தில் தொண்டாற்றினாா். காந்தி- இா்வின் ஒப்பந்த மாநாட்டை சொா்ணாவூரில் லட்சுமி நாராயண ரெட்டியாா் தலைமையில் நடத்தியவா். விழுப்புரத்தில் முதன் முதலில் ஷோசலிஸ்ட் கட்சியைத் தொடங்கியவா். நவஜவான் சங்கத்தைத் தொடங்கி இளைஞா்களுக்கு தேசப் பக்தியை ஊட்டியவா். 1936-இல் அவசர சட்டத்தில் கைதாகி சிறைச் சென்றவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com