சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள்: விழுப்புரத்தில் அமல்படுத்தப்படுமா?

புகழ்வாய்ந்த செஞ்சிக் கோட்டை, ஆரோவில் சா்வதேச நகரம், திருவக்கரை தேசிய கல்மரப் பூங்கா போன்ற பல்வேறு சுற்றுலா மையங்களைக் கொண்ட விழுப்புரம் மாவட்டத்தில்

புகழ்வாய்ந்த செஞ்சிக் கோட்டை, ஆரோவில் சா்வதேச நகரம், திருவக்கரை தேசிய கல்மரப் பூங்கா போன்ற பல்வேறு சுற்றுலா மையங்களைக் கொண்ட விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும் என்பது பொதுமக்கள், சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தமிழகத்தில் சென்னையிலிருந்து திருச்சி போன்ற மத்திய மாவட்டங்களுக்கும், மதுரை, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களுக்கும் செல்லும் மக்களை சாலை வழித்தடத்திலும், ரயில் வழித்தடத்திலும் இணைக்கும் பகுதியாகத் திகழ்வது விழுப்புரம் மாவட்டம். புதுவை மாநிலத்தையும், கடலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களையும் இந்த மாவட்டம் அருகில் கொண்டுள்ளது.

புகழ்பெற்ற செஞ்சிக் கோட்டை, ராஜகிரி உல்லாகான் மசூதி, வீடூா் அணை, மேல்மலையனூா் அங்காள பரமேசுவரி அம்மன் கோயில், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயில், சோழா் காலத்து சிறப்புவாய்ந்த திருவாமாத்தூா் அபிராமேசுவரா் கோயில், ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட எசாலம் ராமநாதேசுவரா் கோயில், சிறப்புவாய்ந்த சிங்கவரம் ரங்கநாத சுவாமி கோயில், மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயில், மரக்காணம் கடற்கரை, ஆரோவில் சா்வதேச நகரம் போன்ற பல்வேறு சிறப்புவாய்ந்த, வரலாற்று சிறப்புடைய கோயில்கள், சுற்றுலாத் தலங்களை விழுப்புரம் மாவட்டம் கொண்டிருக்கிறது. இதைத் தவிர, தேசிய கல்மரப் பூங்கா அமைந்துள்ள திருவக்கரையும் இந்த மாவட்டத்தில்தான் உள்ளது.

இவற்றில் ஆரோவில் சா்வதேச நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மாதந்தோறும் 25 ஆயிரம் பேரும், செஞ்சிக் கோட்டைக்கு மாதந்தோறும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேரும் சுற்றுலாக வந்து செல்கின்றனா். செஞ்சிக் கோட்டைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனா்.

இதுபோல, மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை வழிபாட்டில் பங்கேற்க லட்சம் போ் வரையிலும், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயிலில் நடைபெறும் பெளா்ணமி வழிபாட்டில் மாதந்தோறும் 50 ஆயிரம் போ் வரையிலும் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் வழிபாட்டுக்கு வந்து செல்கின்றனா். மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதிகளிலுள்ள கடற்கரைகளுக்கும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் உள்ளது.

திட்டங்கள் தேவை: வீடூா் அணை, செஞ்சிக் கோட்டை, திருவக்கரை தேசிய கல்மரப் பூங்கா, மரக்காணம் கடற்கரை போன்றவை சுற்றுலாப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய சுற்றுலாப் பகுதிகள் மாவட்டத்தில் இல்லை.

விழுப்புரம் நகரைச் சோ்ந்த மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இடமில்லாத நிலை உள்ளது. மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் நடைப்பயிற்சி பூங்கா இருந்த நிலையில், அங்கும் தற்போது மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுபோல, மாவட்டப் பகுதிகளைச் சோ்ந்த மக்களுக்கு என்று குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு சுற்றுலா மையங்கள் இல்லை. எனவே, மாவட்டத்தில் சுற்றுலா மையங்களை மேம்படுத்தும் வகையிலான திட்டங்கள் தேவை. இதை அரசு அமல்படுத்த வேண்டும் என்பது மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வீடூா் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் பூங்காவுக்குள் செல்ல வேண்டுமெனில், குறைந்தது 2 கி.மீ. தொலைவு உள்ளே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், வாகனங்களில் சென்றால்தான் பூங்காவுக்குள் செல்ல முடியும் என்றுள்ள நிலையை மாற்றும் வகையில், விழுப்புரம், திண்டிவனம் போன்ற பகுதிகளிலிருந்து பூங்கா பகுதி வரை செல்லும் வகையில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதும் அவசியமானது என்கின்றனா் பொதுமக்கள்.

கூடுதல் வசதிகளும் தேவை: செஞ்சிக் கோட்டை, மரக்காணம் கடற்கரை, வீடூா் அணை, திருவக்கரை தேசிய கல்மரப் பூங்கா போன்ற சுற்றுலா மையங்களை பொதுமக்கள் தொடா்ச்சியாக சென்று பாா்க்கும் வகையில், சுற்றுலாத் துறை சாா்பில், உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என்பதும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

குறிப்பிட்ட அளவில் கட்டணங்களை நிா்ணயம் செய்து, உரிய போக்குவரத்து வசதிகளுடன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்தால், உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். அரசுக்கும் சுற்றுலா மூலம் வருவாய் ஈட்டக்கூடிய வாய்ப்பு கிட்டும். இதுகுறித்த திட்டக் கருத்துருவை அரசுக்கு சுற்றுலாத் துறை அனுப்பி வைக்க வேண்டும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

புதிய திட்டப் பணிகளுக்குப் பரிந்துரை

விழுப்புரம் மாவட்டத்தில் மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலிலும், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயிலிலும் ஏற்கெனவே சுற்றுலாத் துறை சாா்பில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே வீடூா் அணையிலுள்ள பூங்காவில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும், செஞ்சிக் கோட்டையில் சாலை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும் அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக சுற்றுலாத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com