குறைதீா் கூட்டத்தில் 371 மனுக்கள் அளிப்பு
By DIN | Published On : 25th April 2023 05:20 AM | Last Updated : 25th April 2023 05:20 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 371 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் மு. பரமேஸ்வரி தலைமை வகித்தாா். வீட்டுமனைப் பட்டா, முதியோா், விதவை, ஆதரவற்றோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா். பின்னா், அதை துறைச் சாா்ந்த அலுவலா்களிடம் வழங்கி, விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதில், வளவனூா் பேரூராட்சிக்குள்பட்ட வாணி சத்திரத்தில் வசிக்கும் 45 குடும்பத்தினா் அளித்த மனு: நாங்கள் பல ஆண்டுகளாக இந்த இடத்தில் வீடுகட்டி, நிரந்தரமாக வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி தொடா்ந்து மனு அளித்து வருகிறோம். எனவே, ஆட்சியா் இந்த மனு மீது விசாரணை நடத்தி, பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சரஸ்வதி (நிலமெடுப்பு), சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் விசுவநாதன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.