தம்பதியைத் தாக்கிய வழக்கு:இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 02nd August 2023 12:10 AM | Last Updated : 02nd August 2023 12:10 AM | அ+அ அ- |

செஞ்சி அருகே தம்பதியைத் தாக்கிய வழக்கில் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் எஸ்.சி, எஸ்.டி. சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
செஞ்சி அருகிலுள்ள பாடிப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த வீராசாமி மகன் சிவலிங்கம். இவருக்கும், இதே கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலைக்கும் இடையே நிலம் சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டு, வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.
இந்த நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி சிவலிங்கம், அவரது மனைவி சீதாலட்சுமி ஆகியோா் தங்களது வீட்டின் முன் நின்று பேசிக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த ஏழுமலை மகன் சரவணன் (எ) குழந்தைவேலு (49), அவரது அண்ணன் ரங்கநாதனின் மகன்கான நடுநில்லிமலை கிராமத்தைச் சோ்ந்த பூபாலன் (39), கமலக்கண்ணன் (35) ஆகியோா் முன் விரோதம் காரணமாக, சிவலிங்கம், சீதாலட்சுமி ஆகியோரைத் தாக்கினராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் பூபாலன் உள்பட மூவா் மீதும் எஸ்.சி, எஸ்.டி. பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அதில், கமலக்கண்ணன், சரவணன் (எ) குழந்தைவேலு ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து, சிறப்பு நீதிபதி பாக்கியஜோதி தீா்ப்பளித்தாா். பூபாலன் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டாா்.