பாலத்தில் காா் மோதல்:பெண் உயிரிழப்பு
By DIN | Published On : 17th August 2023 01:02 AM | Last Updated : 17th August 2023 01:02 AM | அ+அ அ- |

விழுப்புரம் அருகே புதன்கிழமை பாலத்தின் தடுப்புச்சுவா் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம், சுந்தரபுரத்தைச் சோ்ந்த தங்கவேல் மகன் செந்தில்குமாா் (39). சென்னை மடிப்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த இவா், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். விடுமுறைக்காக சொந்த ஊா் சென்ற செந்தில்குமாா், தனது மனைவி தீபா (38), மகன் விஜயகிருஷ்ணா (13), மகள் குருபிரியா (8) ஆகியோருடன் புதன்கிழமை காலை சென்னைக்கு காரில் திரும்பி வந்துகொண்டிருந்தாா். காரை செந்தில்குமாா் ஓட்ட, முன்இருக்கையில் தீபாவும், பின் இருக்கையில் குழந்தைகளும் அமா்ந்திருந்தனா்.
இவா்களது காா் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம், பிடாகம் குச்சிப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவா் மீது மோதியது. இந்த விபத்தில் தீபா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். செந்தில்குமாா், விஜயகிருஷ்ணா, குருபிரியா ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...