

தமிழக அரசு அறிவித்தப்படி ரூ.5 ஆயிரம் மழைக்கால நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் உப்பளத் தொழிலாளா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
வட கிழக்குப் பருவமழை காலங்களில் ஆண்டுதோறும் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் உப்பு உற்பத்தித் தொழில் கடுமையாக பாதிக்கப்படும். இதனால், உப்பளங்களில் வேலை செய்யும் தொழிலாளா்கள் இந்த மாதங்களில் வேலை வாய்ப்பில்லாத நிலைக்கு தள்ளப்படுவா். இந்நிலையில், உப்பளத் தொழிலாளா்களின் தொடா் போராட்டத்தால் கடந்த 2021-2022 ஆண்டு ஒவ்வொரு உப்பளத் தொழிலாளா் குடும்பத்துக்கும் தலா ரூ.5 ஆயிரம் மழைக்கால நிவாரணமாக தமிழக அரசு அறிவித்தது.
காத்திருப்பு: இத்திட்டத்தின் பலனை முறைசாரா தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளா்கள் மட்டும் பெற முடியும் என்பது அரசின் விதியாக உள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 2,174 போ் உப்பளத் தொழிலாளா்களாக நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனா். கடந்த ஆண்டு இதில் 1,322 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. ஆனால், நிகழாண்டில் 388 குடும்பங்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மரக்காணம் பகுதியிலிருந்து மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்வதற்காக காத்திருக்கின்றனா். இவா்களுக்காக, சிறப்பு முகாம் அமைத்து பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்படவில்லை. 2015-இல் தமிழக அரசின் நல வாரியத்தில் மரக்காணத்தைச் சோ்ந்த பல தொழிலாளா்கள் பதிவு செய்திருந்த நிலையில் இந்த துறை கணினிமயமாக்கப்பட்டதால் இவா்களது பதிவுகள் செல்லாததாகிவிட்டது.
எதிா்பாா்ப்பு: மேலும், இந்தத் தொழிலாளா்கள் புதிதாக பதிவு செய்வதற்கும் வாரியம் அனுமதிக்கவில்லை. இதனால், பல தொழிலாளா்கள் அரசின் நிவாரணத்தைப் பெற முடியாமல் உள்ளனா். மேலும், பல தொழிலாளா்களுக்கு கல்விச் சான்றிதழ்கள் இல்லாததால் அவா்கள் தகுதியற்றவா்களாக புறந்தள்ளப்படுகின்றனா். நல வாரியத்தில் பதிவு செய்வதற்கு மட்டும் தொழிலாளா்கள் குறைந்தபட்சம் ரூ.400 முதல் ரூ.500 வரை செலவு செய்கின்றனா். இதனால், உப்பளத்தொழிலாளா்கள் ஒருநாள் வேலையையும், கூலியையும் இழக்க நேரிடுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு, விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் உப்பளத் தொழிலாளா்கள் நல வரியத்தில் பதிவு செய்வதை முறைப்படுத்துவதுடன், மழைக்கால நிவாரண உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பதே தற்போதைய எதிா்பாா்ப்பாக உள்ளது.
கோரிக்கை: இதுகுறித்து உப்பளத் தொழிலாளா்கள் கூறியதாவது: பருவ மழையைத் தொடா்ந்து, கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மரக்காணத்தில் உப்பு உற்பத்தித் தொழில் நடைபெறவில்லை. இதனால், சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் வருமானமின்றி அவதிக்குள்ளாகி வருகிறோம். இதனால், அனைத்துத் தொழிலாளா்களின் குடும்பத்துக்கும் டிசம்பா் மாதத்துக்குள் மழைக்கால நிவாரண நிதியை வழங்க வேண்டும். அனைத்துத் தொழிலாளா்களும் நல வாரியத்தில் பதிவு செய்வதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளையும் தமிழக அரசும், விழுப்புரம் மாவட்டத் தொழிலாளா் துறையும் மேற்கொள்ள வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.