திருவெண்ணெய்நல்லூா் அருகே மூத்ததேவி புடைப்புச் சிற்பம் கண்டெடுப்பு
By DIN | Published On : 12th January 2023 02:29 AM | Last Updated : 12th January 2023 02:29 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூா் அருகே மூத்ததேவி புடைப்புச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்றுத் துறைப் பேராசிரியா் ரமேஷ் புதன்கிழமை தெரிவித்ததாவது:
திருவெண்ணெய்நல்லூா் அருகிலுள்ள தி.எடையாா் கிராமத்தில் திருக்கோவிலூா் சாலையோரத்தில் வீரன் கோயில் எதிரில் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் விசுவநாதனின் நிலத்தை சீா் செய்தபோது இந்த புடைப்புச் சிற்பம் கண்டறியப்பட்டது.
அவா் கூறிய தகவலின்படி, விழுப்புரம் அரசுக் கல்லூரி வரலாற்றுத் துறைப் பேராசிரியா் ரமேஷ் மற்றும் ரங்கநாதன் ஆகியோா் கொண்ட குழுவினா் நேரடியாக சென்று கள ஆய்வு செய்ததில், ‘ஜேஷ்டா தேவி’ என்னும் மூத்த தேவி சிற்பத்தை கண்டறிந்தனா்.
இந்தச் சிற்பம் 100 செ.மீ. உயரமும், 76 செ.மீ. அகலமும் கொண்ட மென்கூட்டு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மூத்த தேவியின் வலது புறம் மகள் மாந்தினியும், இடது புறம் மகன் மாந்தன் எருமைத் தலையுடனும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனா்.
வலதுபுறத்தின் கீழ் மூத்த தேவையின் வாகனம் கழுதையும், அதன் கீழ் சக்கரம் போன்ற அமைப்பும், வலதுபுறம் காக்கை கொடியும், இடதுபுறத்தின் கீழ் ஆண் உருவம் நின்ற நிலையிலும் உள்ளன. இதன் கீழ் கலசம் காணப்படுகிறது. மூத்த தேவியின் இடை முதல் பாதம் வரை நீண்ட ஆடை முடிச்சுடன் தொங்குகிறது. கிராமியக் கலை பாணியில் அமைந்துள்ள இந்தச் சிற்பத்தின் காலம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு பல்லவா் காலமாகும் என்றாா் பேராசிரியா் ரமேஷ்.