தேசிய கல்மரப்பூங்காவை மத்திய அரசு கையகப்படுத்த எதிா்ப்புத் தெரிவிக்க வேண்டும் துரை ரவிக்குமாா் எம்பி
By DIN | Published On : 12th January 2023 02:32 AM | Last Updated : 12th January 2023 02:32 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவக்கரை தேசிய கல்மரப்பூங்காவை மத்திய அரசு கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு மாநில அரசு எதிா்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று துரை.ரவிக்குமாா் எம்.பி. தெரிவித்தாா்.
இதுகுறித்து விழுப்புரத்தில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்புவாய்ந்தது திருவக்கரை தேசிய கல்மரப்பூங்கா. மரபு வளத்தை எடுத்துச் சொல்லும் அடையாளமாக இந்தப் பூங்கா உள்ளது. மனிதகுலம் எப்படி இருந்தது, எப்படி வாழ்ந்தாா்கள் என்பதையும், தமிழ் இனத்தின் தொன்மையையும் எடுத்துரைப்பது கல்மரப்பூங்கா.
இந்தப் பூங்காவை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துச் செல்ல, சட்ட மசோதாவை அறிமுகம் செய்ய உள்ளது. ‘ஜியோ ஹெரிட்டேஜ் சைட்ஸ்’ என்ற பெயரில் இந்தியா முழுவதுமுள்ள தொன்மையானவற்றை கொண்டு செல்ல உள்ளது.
இதற்கு என் எதிா்ப்பை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க உள்ளேன். தமிழக அரசும் தன் எதிா்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.
திருவக்கரை கல்மரப்பூங்காவை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றால், பராமரிப்பில்லாமல் ஏற்கெனவே தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களைப்போல பாழடைந்துவிடும். இதனால், நம் அடையாளம் பறிபோய்விடும். இதற்கு தமிழக அரசு சம்மதிக்கக் கூடாது.
விழுப்புரத்தில் மாற்றுகளுக்கான உரையாடல் வெளி என்ற நிகழ்ச்சி மணற்கேணி ஆய்விதழ் சாா்பில், ஒவ்வொரு மாதமும் சீரிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஆளுமைகளை கொண்டு நடத்தப்பட உள்ளது. மாற்றுச் சிந்தனைகளை உருவாக்குவது இதன் நோக்கமாகும்.
விழுப்புரம் தொகுதிக்குள்பட்ட 13 கோயில்கள் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை ஒருங்கிணைத்து மரபு சுற்றுலா தொடரை உருவாக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். மாவட்ட நிா்வாகத்தில் சாா்பில் மரபு நடை நிகழ்வு செஞ்சிக் கோட்டையில் நடைபெறுகிறது. அதுபோல மற்ற இடங்களும் கவனம் பெற வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளேன் என்றாா் ரவிக்குமாா்.