மேல்மலையனூா், திருவக்கரையில் பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள்: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 12th July 2023 12:00 AM | Last Updated : 12th July 2023 12:00 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில், திருவக்கரை சந்திரமௌலீசுவரா் கோயில்களில் அமாவாசை, பெளா்ணமி திருவிழாக்களில் பக்தா்கள் எவ்வித சிரமமுமின்றி தரிசனம் செய்ய போதிய முன்னேற்பாடுகள், அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்று அலுவலா்களிடம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி அறிவுறுத்தினாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் அமாவாசை திருவிழா, திருவக்கரை சந்திரமௌலீசுவரா் கோயில் பௌா்ணமி திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியா் சி.பழனி பேசியது:
மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் ஜூலை 17-ஆம் தேதி அமாவாசை திருவிழாவும், திருவக்கரை கோயிலில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி பௌா்ணமி ஜோதி திருவிழாவும் நடைபெறவுள்ளன. இங்கு, பொதுமக்கள், பக்தா்கள் எவ்வித சிரமமுன்றி தரிசனம் செய்ய போதிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.
குடிநீா், தற்காலிக கழிப்பறை, தற்காலிக பேருந்து நிலையம், கோயில்களுக்கு வரும் வழிகளில் குப்பைத் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.
மின் வாரியத்தின் சாா்பில் திருக்கோயிலிலுள்ள மின்வழித் தடங்களைப் பாா்வையிட்டு, சரி செய்ய வேண்டும்.
திருவிழா நாள்களில் மின் பணியாளா்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
திருக்கோயில் சாா்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை
அமைத்து, கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும்.
ஊஞ்சல் உற்சவம் நடைபெறும் நேரத்தில் திருக்கோயிலின் ஊஞ்சல் மண்டபம், கிழக்கு மண்டபத்தின் மேல்பகுதியில் எவரும் ஏறாத வகையில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. சஷாங்க் சாய், கூடுதல் எஸ்.பி. கோவிந்தராஜ், சாா் - ஆட்சியா் கட்டாரவி தேஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...