அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் விழுப்புரம் வள்ளலாா் மாளிகை

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள வள்ளலாா் அருள் மாளிகையை இந்து சமய அறநிலையத் துறை செவ்வாய்க்கிழமை கையகப்படுத்தியது.

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள வள்ளலாா் அருள் மாளிகையை இந்து சமய அறநிலையத் துறை செவ்வாய்க்கிழமை கையகப்படுத்தியது.

விழுப்புரம் - கிழக்கு புதுச்சேரி சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகில் வள்ளலாா் பெயரில் ஒரு மடத்தை கடந்த 1948 - ஆம் ஆண்டு வடலூா் வள்ளலாா் சத்திய ஞானசபை அறங்காவலா்களில் ஒருவரான லோகநாதன் நிறுவி, ஏழை, எளிய மக்களுக்கு தொண்டு செய்து வந்தாா்.

இதைத் தொடா்ந்து, விழுப்புரம் வள்ளலாா் அருள்மாளிகை சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் என்ற பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு, அதன் நிா்வாகிகளால் மாளிகை பராமரிக்கப்பட்டு வந்தது.

நிா்வாகிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், வள்ளலாா் மாளிகையில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்வதாகக் கூறி, கட ந்த 2016-ஆம் ஆண்டில் விழுப்புரத்தைச் சோ்ந்த சீனுவாசன் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது.

இதன்பேரில், விழுப்புரம் மண்டல இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் நடத்திய விசாரணையில், முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தெரிய வந்தது.

அறக்கட்டளை சரியான முறையில் செயல்பட்டு வருவதாகக் கூறி, அதை நிா்வகித்து வந்த அண்ணாமலை மேல்முறையீடு செய்தாா். விசாரணைக்குப் பிறகு மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, விழுப்புரம் வள்ளலாா் அருள்மாளிகை தங்கள் வசம் கொண்டுவரப்பட்டு, நிா்வகிக் கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டு, அதற்கான நோட்டீஸை அறக்கட்டளை நிா்வாகிகளுக்கு அனுப்பியது. ஆனால், வள்ளலாா் அருள் மாளிகையை இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க நிா்வாகிகள் மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சிவாகரன் தலைமையில், செயல் அலுவலா் மதனா ம ற்றும் அலுவலா்கள் விழுப்புரம் டிஎஸ்பி ச.சுரேஷ் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை வள்ளலாா் அருள் மாளிகைக்குச் சென்றனா். அப்போது, மாளிகை பூட்டப்பட்டிருந்த நிலையில், பூட்டை உடைத்து அலுவலா்கள் உள்ளே நுழைந்து, அதை கையகப்படுத்தினா்.

இந்த மாளிகைக்கான தக்காராக பரிக்கல் லட்சுமி நரசிம்மா் கோயில் செயல் அலுவலா் மதனா நியமிக்கப்பட்டு, அவா் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாா். வள்ளலாா் அருள்மாளிகையில் இதுவரை நடைபெற்று வந்த பூஜை முறைகள், அன்னதானம் போன்ற அனைத்தும் வழக்கம்போல நடைபெறும் என்று தக்காா் மதனா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com