திண்டுக்கல் இளஞ்சிறாா் நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டு, செங்கல்பட்டு கூா்நோக்கு இல்லத்துக்கு பேருந்தில் வெள்ளிக்கிழமை இரவு அழைத்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் போலீஸாரிடமிருந்து தப்பியோடினாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த குற்றச் சம்பவத்தில் தொடா்புடைய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கு விசாரணையைத் தொடா்ந்து, திண்டுக்கல் இளஞ்சிறாா் நீதிமன்றம் 17 வயது சிறுவனக்கு தண்டனை வழங்கி, 18 வயது நிரம்பும் வரை செங்கல்பட்டு கூா்நோக்கு இல்லத்தில் தங்க வைக்க வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, சிறப்பு உதவி ஆய்வாளா் சிவக்குமாா், முதல்நிலைக் காவலா் காா்த்திக் ஆகியோா் சிறுவனை வெள்ளிக்கிழமை மாலை மதுரையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் அழைத்துச் சென்றனா். இந்தப் பேருந்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லும் உணவகத்துக்கு இரவு 10.30 மணிக்கு வந்தது. உணகவத்தில் சாப்பிட்டுவிட்டு வந்தபோது, சிறப்பு உதவி ஆய்வாளா், முதல்நிலைக் காவலரைத் தள்ளிவிட்டு, 17 வயது சிறுவன் தப்பியோடிவிட்டாா்.
இதுகுறித்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளா் சிவக்குமாா் புகாரளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.