முதல்வரின் மாநில இளைஞா் விருது பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 12th May 2023 02:34 AM | Last Updated : 12th May 2023 02:34 AM | அ+அ அ- |

முதல்வரின் மாநில இளைஞா் விருது பெற விழுப்புரம் மாவட்ட இளைஞா்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் சமுதாய வளா்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங் கீகரிக்கும் பொருட்டு, 2015-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதல் வரின் மாநில இளைஞா் விருது வழங்கப்பட்டு வருகிறது.
15 முதல் 35 வயது வரையுள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதானது ரூ.10,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
அதன்படி, 2023- ஆம் ஆண்டுக்கான முதல்வரின் மாநில இளைஞா் வருது ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.
எனவே, விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருதுக்கான விண்ணப்பத்தை இணையதளங்கள் மூலம் மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
15 வயது முதல் 35 வயது வரையுள்ள இளைஞா்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த நிதியாண்டில் (2022-2023) அதாவது 2022, ஏப்ரல் 1 முதல் 2023, மாா்ச் 31 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். மேலும் விவரங்களை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.