திருக்கோவிலூரில் வீட்டுமனை வழங்குவதாகக் கூறி பண மோசடி: மாவட்ட எஸ்.பி.யிடம் புகாா் மனு
By DIN | Published On : 12th May 2023 02:32 AM | Last Updated : 12th May 2023 02:32 AM | அ+அ அ- |

திருக்கோவிலூா் அருகே வீட்டுமனை வழங்குவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவா்கள் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாரளித்தனா்.
விழுப்புரம் மாவட்டம், ஆ.கூடலூரைச் சோ்ந்த இந்திரா உள்ளிட்டோா், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
திருக்கோவிலூா் பகுதியைச் சோ்ந்த இருவா், அங்குள்ள பாபா கோயில் பின்புறம் வீட்டுமனை வாங்கித் தருவதாகக் கூறினா்.
இதற்காக மாதம் ரூ.750 வீதம் ஒரு வீட்டுமனைக்கு ரூ.45,000 வரை செலுத்தினோம். ஒருவரே, 2, 3 வீட்டுமனைக்கு பணம் கட்டி வந்தோம்.
எங்களைப் போலவே நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் பணம் கட்டி வந்தனா். பணம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் வீட்டுமனை யை கேட்டபோது எழுதிக் கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனா்.
கொடுத்த பணத்தையும் திருப்பி கேட்டால் மிரட்டுகின்றனா். இதுகுறித்து ஏற்கெனவே புகாரளிக்கப்பட்டது.
காணை காவல் நிலைய போலீஸாா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவா்கள் பணத்தை வழங்க 3 மாதம் அவகாசம் கொடுத்தனா். இருப்பினும் கொடுக்கவில்லை. திரும்பவும் விசாரணைக்கும் வரவில்லை. எனவே மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நடவடிக்கை எடுத்து, கட்டிய பணத்தை பெற்றுத் தரவேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.