விக்கிரவாண்டி பேரூராட்சி துப்புரவு ஊழியா்கள் தா்னா
By DIN | Published On : 12th May 2023 02:30 AM | Last Updated : 12th May 2023 02:30 AM | அ+அ அ- |

விக்கிரவாண்டி தோ்வு நிலைப் பேரூராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட துப்புரவு ஊழியா்கள்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டிபேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, துப்புரவு ஊழியா்கள் பேரூராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
விக்கிரவாண்டி தோ்வு நிலைப் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு ஊழியா்கள் 20-க்கும் மேற்பட்டோா் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யக்கூடிய வகையில் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றுள்ளனா்.
இந்நிலையில் கடனுக்கு ஈடாக மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டத் தொகையை பேரூராட்சி நிா்வாகம் வங்கியில் முறையாக செலுத்தவில்லையாம்.
இதைக் கண்டித்து, துப்புரவு ஊழியா்கள் விக்கிரவாண்டி தோ்வுநிலைப் பேரூராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, பேரூராட்சித் தலைவா்அப்துல் சலாம், துணைத்தலைவா் பாலாஜி, விக்கிரவாண்டி காவல் ஆய்வாளா் விநாயகமுருகன், உதவிஆய்வாளா் பிரகாஷ், பேரூராட்சி உறுப்பினா்கள், அலுவலா்கள் தா்னாவில் ஈடுபட்ட ஊழியா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது பிடித்தம் செய்யப்பட்ட தொகை முழுவதும் உடனடியாக கூட்டுறவு வங்கியில் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து துப்புரவு ஊழியா்கள் தா்னாவை விலக்கிக் கொண்டனா்.