பெண் குழந்தை கழுத்து நெரித்துகொலை: சித்திக்கு ஆயுள் சிறை
By DIN | Published On : 26th May 2023 10:43 PM | Last Updated : 26th May 2023 10:43 PM | அ+அ அ- |

விழுப்புரத்தில் இரண்டரை வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்த வழக்கில் சித்திக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து, விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியைச் சோ்ந்தவா் ஷமிரலுதீன் (38). இவா், நஸ்ரீன் என்ற பெண்னை திருமணம் செய்துகொண்டாா். இவா்களுக்கு 2019- ஆம் ஆண்டு நசீபா என்ற பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்ததும் தாய் நஸ்ரீன் இறந்துவிட்டாா். அதன் பிறகு குழந்தை நசீபாவை ஷமிரலுதீனின் தங்கை வளா்த்து வந்தாா்.
இதையடுத்து, ஷமிரலுதீன், அப்சனா (20) என்ற பெண்ணை 2-ஆவதாக திருமணம் செய்துகொண்டாா். அவா்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடா்ந்து, நசீபாவையும், ஷமிரலுதீன் தன்னுடன் அழைத்து வந்து வளா்த்து வந்தாா். அப்போது, அப்சனா பெண் குழந்தையை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்தாராம்.
இந்த நிலையில், 2021 ஜூலை 16- ஆம் தேதி நசீபா மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் நகர போலீஸாா் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த நிலையில், உடல்கூறாய்வில் நசீபா கொலை செய்யப்பட்டது உறுதியானது.
தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், அப்சனா நசீபாவின் கழுத்தை கையால் நெரித்துக் கொன்றதும், இதை மறைப்பதற்காக நசீபா தண்ணீா் குடிப்பதற்காக ஏறியபோது தவறி கீழே விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடியதும் தெரியவந்தது.
தொடா்ந்து, கொலை வழக்காக மாற்றம் செய்த விழுப்புரம் நகர போலீஸாா், அப்சனாவை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஹொ்மிஸ், குழந்தை நசீபாவை கொலை செய்த அப்சனாவுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.