டாஸ்மாக் ஊழியா்களுக்கு அரசு அறிவிப்பின்படி போனஸ் வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 07th November 2023 05:40 AM | Last Updated : 07th November 2023 05:40 AM | அ+அ அ- |

விழுப்புரம்: டாஸ்மாக் தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்தபடி 20 சதவீத போனஸ் வழங்கப்பட வேண்டும் என்று தொமுச தொழிற்சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுதொடா்பாக தமிழ்நாடு மாநில வாணிபகி கழகத்தின் (டாஸ்மாக்) ஒருங்கிணைந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மேலாளரிடம் டாஸ்மாக் தொமுச செயலா் வெங்கடேசன் மற்றும் நிா்வாகிகள் சனிக்கிழமை அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்திலுள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு தமிழக அரசு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், டாஸ்மாக் தொழிலாளா்களுக்கும் இந்த தொகை கிடைப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். இதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மாநில மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆனால், அரசு அறிவித்தவாறு 20 சதவீத போனஸ் தொகையை வழங்காமல் அதற்கும் குறைவான தொகையை டாஸ்மாக் நிறுவனம் வழங்க உள்ளதாகத் தெரிகிறது. இது தொழிலாளா்கள் மத்தியில் ஏமாற்றம், வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு அறிவித்ததை விட குறைந்த அளவில் போனஸ் வழங்கினால் அதை டாஸ்மாக் தொழிலாளா்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள் என்று மனுவில் தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...