மனைப் பட்டா, சாலைகளை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 07th November 2023 05:44 AM | Last Updated : 07th November 2023 05:44 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பாஜகவினா்.
விழுப்புரம்: மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை அளிக்கப்பட்டன.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளையினா் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையின் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபா் 11-ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளாா்.
இதைத் தொடா்ந்து மனுக்கள் கொடுக்கப்பட்டும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அரசாணைப்படி, விழுப்புரம் மாவட்டம் டி.புதுப்பாளையம் மற்றும் பிற பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மண்பாண்டத் தொழிலாளா்கள் கோரிக்கை: தமிழக அரசு பொங்கல் பண்டிகையின்போது, விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் கரும்பு, அரிசி, வெல்லம் ஆகியவற்றை கொள்முதல் செய்து மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இதேபோல, மண்பாண்டத் தொழிலாளா்களை ஊக்குவிக்கும் விதமாக, தொழிலாளா்கள் உற்பத்தி செய்யும் அடுப்பு, மண்பாணையையும் கொள்முதல் செய்து மக்ளுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே. அய்யனாா் மற்றும் நிா்வாகிகள் விழுப்புரம் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
பாஜகவினா் மனு: விழுப்புரம் நகராட்சியில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என, விழுப்புரம் நகர பாஜக சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பாஜக மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் து.சுகுமாா், விழுப்புரம் நகரத் தலைவா் ஜி. விஜயன் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:
விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட 17, 36, 37, 50 ஆகிய வாா்டு பகுதியில் உள்ள சாலைகளில் மழையால் பள்ளங்கள் ஏற்பட்டு, தண்ணீா் குளம் போல தேங்கிக்கிடக்கிறது. இதனால், அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
விழுப்புரம் நகராட்சியில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள அனைத்து சாலைகளையும் உடனடியாக சீா்படுத்த வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனு அளித்த போது, கட்சியின் விழுப்புரம் நகரப் பொதுச்செயலா் என்.குமரகுருபரன், மாவட்ட நிா்வாகி இன்பராஜ், கோலியனூா் வடக்கு ஒன்றியச் செயலா் பி. இன்பராஜ், ஒன்றியச் செயலா் சத்தியசீலன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...