

விழுப்புரம்: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், நாட்டாா்மங்கலத்தில் கடந்த மாா்ச் மாதம் 7-ஆம் தேதி அதிமுக சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சி.வி.சண்முகம் பங்கேற்று பேசினாா்.
அப்போது, அவா் தமிழக அரசு குறித்தும், முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞா் டி.எஸ். சுப்பிரமணியன் வழக்குத் தொடுத்தாா்.
இந்த வழக்கு மீதான விசாரணை செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெற்ற போது, அக்டோபா் 9-ஆம் தேதி ஆஜராகுமாறு முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் ஆஜரான நிலையில், வழக்கு விசாரணை நவம்பா் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை (நவ.6) நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜரானாா். அப்போது, அதிமுக சாா்பில் சீனிவாசன் உள்ளிட்ட வழக்குரைஞா்களும் நீதிமன்றத்துக்கு வந்தனா். வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வருகிற 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி ஆா். பூா்ணிமா உத்தரவிட்டாா்.
மற்றொரு வழக்கில் அழைப்பாணை: வானூா் வட்டம், ஆரோவில் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த மாா்ச் மாதம் 10-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக, அரசு சாா்பில் விழுப்புரம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் தனக்கு அழைப்பாணை கிடைக்கப் பெறவில்லை என அக்டோபா் 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான போது சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தாா். இதன் பின்னா், கடிதம் மூலம் அழைப்பாணையை அனுப்பி, அது திரும்பி வந்து விட்ட நிலையில், திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான போது சி.வி.சண்முகத்திடம் அழைப்பாணை வழங்கப்பட்டது. இந்த வழக்கிலும் வருகிற 21-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.