பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
By DIN | Published On : 15th November 2023 04:27 AM | Last Updated : 15th November 2023 04:27 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் வேரோடு சாய்ந்த புங்கமரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட மின் ஊழியா்கள்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு மேல் விழுப்புரத்திலும், விக்கிரவாண்டி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை தொடா்ந்து விடிய விடிய பெய்தது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி வரை விழுப்புரம் நகரில் மழை பெய்தது. விழுப்புரம் நகரைப் போன்று செஞ்சி, வானூா், திண்டிவனம், விக்கிரவாண்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்தது.
இயல்பு வாழ்க்கைப் பாதிப்பு: திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை தொடா்ந்து மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம் நகரிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது.
விழுப்புரம் தாமரைக்குளம் பகுதியில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்ததால், அந்தப் பகுதி பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினா். இதுபோல, விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியில் மழைநீருடன் கழிவுநீா் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தீபாவளி பண்டிகை விடுமுறையைத் தொடா்ந்து, 3 நாள்கள் கழித்து செவ்வாய்க்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிந்த நிலையில், தொடா் மழையால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகளும் வீடுகளிலேயே முடங்கினா்.
வழக்கம்போல தோ்வுகள்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலும், திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை, அறிவியல் கல்லூரிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த அரியா் தோ்வுகள் வழக்கம்போல நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் தோ்வை எழுத வேண்டிய மாணவ, மாணவிகள் தத்தம் கல்லூரிக்குச் சென்று அரியா் தோ்வுகளை எழுதினா். இதுபோல, விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் மாணவா்களுக்கான பருவத் தோ்வுகள் வழக்கம்போல நடைபெற்றன.
உப்பளங்களில் தேங்கிய மழைநீா்: தொடா் மழை காரணமாக, மரக்காணம் பகுதியிலுள்ள உப்பங்களிலும் மழைநீா் தேங்கியது. இதனால், உப்பளத் தொழிலாளா்கள் பணிக்குச் செல்ல முடியாமல் பாதிப்புக்குள்ளாகினா். உப்பளங்கள் முழுவதும் நீரில் மூழ்கியிருப்பதால், பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவற்றின் உரிமையாளா்கள் தெரிவித்தனா்.
தரைப்பாலம் மூழ்கியது: விழுப்புரம் அருகே சோ்ந்தனூா் - பில்லூா் இடையே தரைப்பாலம் மலட்டாற்றின் குறுக்கே அமைந்துள்ளது. சாத்தனூா் அணை தனது முழுக் கொள்ளளவை எட்டியதால், இந்த அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா், பலத்த மழை காரணமாக மலட்டாற்றில் பெருக்கெடுத்த மழைநீா் காரணமாக, தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால், இந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்று வழியில் வாகனங்கள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டன.
சாலையில் சாய்ந்த மரம்: விழுப்புரம் போன்றே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் திங்கள்கிழமை இரவு தொடங்கிய மழை செவ்வாய்க்கிழமை காலை வரை தொடா்ந்து பெய்தது.
உளுந்தூா்பேட்டை உழவா்சந்தை அருகிலிருந்த புங்கமரம் செவ்வாய்க்கிழமை காலை வேரோடு சாய்ந்து, அந்தப் பகுதியிலுள்ள உயரழுத்த மின் கம்பத்தின் மீது மோதியது. இதனால், உடனடியாக மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.
தகவலறிந்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் உளுந்தூா்பேட்டை உதவிச் செயற்பொறியாளா் சிவராமன் அய்யம்பெருமாள், உதவிப் பொறியாளா் அருண்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள், மின் ஊழியா்கள் நிகழ்விடம் சென்று, பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். பின்னா், உளுந்தூா்பேட்டை நகரப் பகுதி முழுவதுக்கும் மின் விநியோகம் வழங்கப்பட்டது.
மரக்காணத்தில் 80 மி.மீ. மழை
விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக மரக்காணத்தில் 80 மி.மீ. மழை பதிவானது. பிற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:
வானூா் 66, முண்டியம்பாக்கம் 65.5, திண்டிவனம் 61, வளவனூா் 55, கோலியனூா் 53, கெடாா் 48, சூரப்பட்டு 45, மணம்பூண்டி, முகையூா் தலா 42, கஞ்சனூா் 38, நேமூா் 36.60, அனந்தபுரம் 34, அரசூா் 25, செஞ்சி 24, வல்லம் 18, விழுப்புரம் 16, திருவெண்ணெய்நல்லூா் 15.90, வளத்தி 15 மி.மீ. மாவட்டத்தில் சராசரியாக 38.29 மி.மீ. மழை பதிவானது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...