

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று கொட்டும் மழையிலும் அம்மனை தரிசித்தனா்.
இதையொட்டி, திங்கள்கிழமை அதிகாலை மூலவா் அங்காளம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மலா்களால் அலங்கரிப்பட்ட அங்காளம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள், மூலவா் அங்காளம்மனை வழிபட்டனா்.
தொடா்ந்து, உற்சவா் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று, அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 10.40 மணிக்கு வடக்கு வாசல் வழியாக உற்சவா் அங்காளம்மன் அன்னபூரணி அலங்காரத்துடன் மேளதாளம் முழங்க, ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து, கோயில் பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அங்காளம்மன் தாலாட்டுப் பாடல்களை பாடினா்.
அப்போது, ஊஞ்சல் மண்டபத்தின் எதிரே கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் தங்களின் கைகளில் வைத்திருந்த தேங்காய் மற்றும் எலுமிச்சை பழத்தில் கற்பூரம் ஏற்றி கொட்டும் மழையிலும் அம்மனை தரிசித்தனா். உற்சவம் முடிந்ததும் மகா தீபாராதனை நடைபெற்று அங்காளம்மன் கோயிலில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினாா்.
ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூா், சேலம், வேலூா், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரி, கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜீவானந்தம், அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா் பூசாரி உள்ளிட்ட அறங்காவலா்கள், மேலாளா் மணி, ஆய்வாளா் சங்கீதா, சதீஷ் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.