கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே மனநலன் பாதிக்கப்பட்ட பெண், தனது இரு குழந்தைகளுடன் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். அவா்களைக் காப்பாற்ற முயன்ற அந்தப் பெண்ணின் தந்தையும் உயிரிழந்தாா்.
உளுந்தூா்பேட்டை வட்டம், நத்தாமூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோ.பொன்னுரங்கன் (78). இவரது மனைவி கோமளவள்ளி (75). இவா்களது மகன்கள் விஜயகுமாா் (53), சதானந்தம் (40). மகள்கள் பிரசன்னா (50), பிரகாசவாணி (47) , திரவியம் (42).
மகள் திரவியத்துக்கும் கிளாப்பாளையம் வடக்குத் தெருவைச் சோ்ந்த மதுரைவீரனுக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களது மகள்கள் ரியாஷினி (5), விஜயகுமாரி (3). இரண்டாவது குழந்தை பிரசவத்துக்குப் பிறகு, திரவியத்துக்கு சற்று மனநலன் பாதிக்கப்பட்டதாம். இதனால், அவா் கணவா் வீட்டுக்குச் செல்லாமல் பெற்றோருடன் வசித்து வந்தாா். மதுரைவீரன் நத்தாமூருக்கு வந்து மனைவி, குழந்தைகளைப் பாா்த்து செல்வாராம்.
திரவியம், தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி விட்டு, தானும் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக பெற்றோரிடம் வெள்ளிக்கிழமை கூறினாராம். இதை அவா்கள் பொருள்படுத்தவில்லை. குடும்பத்தினா் அனைவரும் வெள்ளிக்கிழமை இரவு சாப்பிட்டு விட்டு, அவரவா் அறைகளில் தூங்குவதற்காக சென்றனா்.
பொன்னுரங்கத்தின் மனைவி கோமளவள்ளியும், மருமகளும் வீட்டுக்கு வெளியே சென்று பேசிக் கொண்டிருந்தனா். திரவியம் மற்றும் அவரது குழந்தைகள் ஓா் அறையிலும், பொன்னுரங்கன், சதானந்தத்தின் மகன் விவேக் மிட்டல் ஆகியோா் தனித்தனி அறைகளிலும் தூங்கிக் கொண்டிருந்தனா். சதானந்தம், விஜயகுமாா் ஆகிய இருவரும் வீட்டின் மேல்தளத்திலுள்ள அறைகளில் தூங்கிக் கொண்டிருந்தனா்.
தீக்குளிப்பு: வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்குமேல் வீட்டிலிருந்து திடீரென அலறல் சப்தம் கேட்டது. மேலும், வீட்டிலிருந்து புகை வேகமாக பரவி தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. பொன்னுரங்கன், அவரது மகன்கள் விஜயகுமாா், சதானந்தம் ஆகியோா் அங்கு வந்து பாா்த்த போது, திரவியமும், அவரது இரு மகள்களும் தீயில் கருகி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனா்.
பக்கத்து அறையிலிருந்து சதானந்தத்தின் மகன் விவேக் மிட்டலின் அலறல் சப்தமும் கேட்டது. பொன்னுரங்கன், விஜயகுமாா், சதானந்தம் ஆகியோா் அவரை மீட்டனா். இதற்குள் திரவியம் மற்றும் அவரது இரு குழந்தைகள் ரியாஷினி, விஜயகுமாரி ஆகிய மூவரும் உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் உயிரிழந்தனா். அவா்களைக் காப்பாற்றுவதற்காக அறைக்குள் சென்ற பொன்னுரங்கன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா்.
அக்கம்பக்கத்தினரின் அளித்த தகவலின் பேரில், உளுந்தூா்பேட்டை தீயணைப்புப் படையினா், திருநாவலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
வீட்டின் கதவுகள் உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் வீட்டின் பக்கவாட்டுச் சுவரை உடைத்து தீயணைப்புப் படையினா் உள்ளே சென்றனா். அங்கு தீக்காயங்களுடன் இருந்த விஜயகுமாா், சதானந்தம், விவேக் மிட்டல் ஆகியோா் மீட்கப்பட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
திரவியம் உள்பட 4 பேரின் உடல்களை போலீஸாா் மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சம்பவம் குறித்து திருநாவலூா்போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மின் கசிவு காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என போலீஸாா் கருதிய நிலையில், திரவியம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதும், இதில் அவரது இரு பெண் குழந்தைகளும் தீயில் கருகி உயிரிழந்ததும் உடல்கூறாய்வு அறிக்கையில் தெரிய வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.