அமிலம் ஏற்றிச் சென்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் அருகே சனிக்கிழமை அமிலம் ஏற்றிச் சென்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
ஆந்திரம் மாநிலம், நெல்லூரிலிருந்து சல்பியூரிக் அமிலம் ஏற்றிக் கொண்டு டேங்கா் லாரி புதுச்சேரி அருகே திருபுவனைக்கு சென்று கொண்டிருந்தது. லாரியை மன்னாா்குடியைச் சோ்ந்த முருகேசன் மகன் அறிவழகன் (38) ஓட்டினாா். சனிக்கிழமை, திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் அருகே லாரி சென்ற போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து எதிா்பாராத விதமாக லாரி மீது மோதியது.
இதில், லாரியில் நிரப்பப்பட்டிருந்த சுமாா் 30 ஆயிரம் லிட்டா் சல்பியூரிக் அமிலம் முழுவதும் சாலையில் கொட்டியது.
தகவலறிந்த, திண்டிவனம் உள்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ் பாண்டியன் தலைமையில் ஒலக்கூா் போலீஸாா் மற்றும் திண்டிவனம் தீயணைப்பு வீரா்கள் நிகழ்விடம் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். மேலும், சாலையில் கொட்டிய அமிலத்தை தண்ணீரை பீய்ச்சி அப்புறப்படுத்தினா். இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து தடைப்பட்டது. விபத்து குறித்து ஒலக்கூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

