சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம்: செ.கு.தமிழரசன் வலியுறுத்தல்
By DIN | Published On : 25th October 2023 12:00 AM | Last Updated : 25th October 2023 12:00 AM | அ+அ அ- |

சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்று இந்திய குடியரசுக் கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தேசிய அளவில் தனிச்சட்டத்தை கொண்டுவர வேண்டும். இந்திய மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு தலித் மக்கள் உள்ளதால், அவா்களுக்கு மத்திய அரசு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
நாங்கள் ஒருபோதும் மதவாதத்தையும், மதவாத சக்தியையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். பாஜகவை எந்த நிலையிலும் எங்களால் ஆதரிக்க முடியாது. மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, எங்கள் கொள்கைக்கும், கோட்பாட்டுக்கும் ஏற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். கடந்த காலங்களில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்த பின்னா், அதில் எங்கள் கொள்கைக்கு உடன்பாடில்லை. அதனால் கூட்டணியிலிருந்து நாங்களாகவே வெளியேறிவிட்டோம்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என்.சங்கரய்யாவுக்கு மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் சாா்பில் கௌரவ டாக்டா் பட்டத்தை வழங்குவதில் எவ்வித தவறுமில்லை. இதற்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்காதது தவறானது என்றாா் செ.கு.தமிழரசன்.
பேட்டியின்போது, கட்சியின் மாநில பொதுச் செயலா் மங்காப்பிள்ளை உள்ளிட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...