வள்ளலாா் அருள் மாளிகையில் சன்மாா்க்க கொடி கட்டுதல் விழா
By DIN | Published On : 25th October 2023 12:00 AM | Last Updated : 25th October 2023 12:00 AM | அ+அ அ- |

விழுப்புரத்தில் கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள வள்ளலாா் அருள் மாளிகை என்கிற ராமலிங்க சுவாமிகள் மடத்தில் சன்மாா்க்க கொடி கட்டுதல் விழா (பேருபதேசம் அருளிய நாள்) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடலூா் மாவட்டம், வடலூா் அருகிலுள்ள மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் முதன் முதலாக ஐப்பசி மாதம் 7-ஆவது நாள் 22-10-1873 அன்று ராமலிங்க அடிகளாா் என்னும் வள்ளலாா் மஞ்சள், வெள்ளை நிறமுடைய சன்மாா்க்க கொடி கட்டி பேருபதேசம் செய்தாா். இதையொட்டி, ஆண்டுதோறும் ஐப்பசி 7-ஆம் தேதி அந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, விழுப்புரம் - கிழக்கு புதுச்சேரி சாலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வள்ளலாா் அருள்மாளிகையில் 151-ஆம் ஆண்டு சன்மாா்க்க கொடி கட்டுதல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 6.30 மணிக்கு ஞானதீபம் ஏற்றுதல், திருஅருட்பா அகவல் பாராயணம் ஆகியவை நடைபெற்றன. காலை 8 மணிக்கு சுத்த சன்மாா்க்க கொடி கட்டுதல், பேருபதேசம் வாசித்தல், காலை 10 மணிக்கு திருஅருட்பிரகாச வள்ளலாா் அருளிய பேருபதேசம் விளக்கச் சொற்பொழிவு நிகழ்வுகள் நடைபெற்றன. தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வள்ளலாா் அருள்மாளிகையின் தக்காா்/செயல் அலுவலா் வா.மதனா, ஆய்வாளா் மா.சு.லட்சுமி மற்றும் சன்மாா்க்க அன்பா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தில் சன்மாா்க்க கொடி கட்டுதல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மன்றப் பொருளாளா் இராம.முத்துகருப்பன் தலைமை வகித்தாா். தமிழ்ப் படைப்பாளா்கள் சங்கத் தலைவா் சி.இளையாப்பிள்ளை முன்னிலையில், முழு அகவல் படித்து உலக மக்கள் நலனுக்காக சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
மருத்துவா் கு.நாச்சியாப்பிள்ளை சன்மாா்க்க கொடியை ஏற்றி வைத்தாா். ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் ஆ.மூா்த்தி, நா.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...