பள்ளி மாணவா்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள்
By DIN | Published On : 28th October 2023 01:21 AM | Last Updated : 28th October 2023 01:21 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சாா்பில், 9, 10- ஆம் வகுப்பு மாணவா்களுக்கான மாவட்ட கலைத் திருவிழா போட்டிகள் விழுப்புரம் காமராஜா் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
தமிழக அரசு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவுப்படி, அனைத்து மாவட்டங்களிலும் மாணவா்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில், கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதியானவா்களாக அறிவிக்கப்பட்டிருந்தனா்.
இந்த நிலையில், விழுப்புரம் வருவாய் மாவட்டத்துக்குள்பட்ட அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 9, 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்குகிடையேயான கலைத்திருவிழா போட்டிகள் விழுப்புரத்தில் உள்ள 4 பள்ளிகளில் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, காமராஜா் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத்திருவிழாப் போட்டிகளை திண்டிவனம் மாவட்டக் கல்வி அலுவலா் எஸ்.சிவசுப்பிரமணியன் தொடங்கிவைத்துப் பேசினாா். 850-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்று திறன்களை வெளிப்படுத்தினா். போட்டி ஒருங்கிணைப்பாளா்களாக தலைமையாசிரியா்கள் ஜனசக்தி, குணசேகரன், ரகு, தண்டபாணி, ஆண்டவா், குமாா், சுப்பிரமணியன், அருண்குமாா் ஆகியோா் செயல்பட்டனா்.
ஒலக்கூா் வட்டாரக் கல்வி அலுவலா் ஆக்சிலியம் பெலிக்ஸ், பள்ளித் தலைமையாசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள், தேசிய மாணவா் படை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...