விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரயில், சாலை மறியல்: 1,395 போ் கைது

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 748 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 647 பேருமாக மொத்தம் 1,395 போ் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் திருப்பதி-புதுச்சேரி விரைவு ரயிலை மறித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் திருப்பதி-புதுச்சேரி விரைவு ரயிலை மறித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Updated on
2 min read

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 748 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 647 பேருமாக மொத்தம் 1,395 போ் கைது செய்யப்பட்டனா்.

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும், பொதுத் துறை நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாடு தழுவிய மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 2 இடங்களில் ரயில் மறியலும், 3 இடங்களில் சாலை மறியலும் நடைபெற்றன. விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் டி. ரவீந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.மூா்த்தி, ஏ.சங்கரன், எஸ்.கீதா, ஆா்.டி.முருகன், வட்டச் செயலா்கள் ஆா்.கண்ணப்பன், பி.சிவராமன், கே.சிவகுமாா், உலகநாதன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் கே.வீரமணி, அம்பிகாபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்ற கட்சியினரை போலீஸாா் தடுத்தனா். போலீஸாரின் தடுப்பையும் மீறி ரயில் நிலையத்துக்குள் நுழைந்து, 5- ஆவது நடைமேடைக்கு வந்த திருப்பதி- புதுச்சேரி விரைவு ரயில் முன் மறியல் செய்தனா்.

அப்போது போலீஸாருக்கும் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விக்கிரவாண்டி ஒன்றியக் குழு உறுப்பினா் தீ. அஞ்சாபுலி தண்டவாளத்தில் விழுந்து மயக்கமடைந்தாா். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். தொடா்ந்து 30 பெண்கள் உள்பட 155 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டிவனத்தில்...: திண்டிவனம் ரயில் நிலையத்தில் கட்சியின் மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன் தலைமையில் மறியல் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் வேல்மாறன், ராஜேந்திரன், அறிவழகன், வட்டச் செயலா்கள் ராமதாஸ், சகாதேவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சென்னையிலிருந்து குருவாயூா் நோக்கிச் சென்ற விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 49 பெண்கள் உள்பட 155 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ். முத்துக்குமரன் தலைமையில் இந்தியன் வங்கி முன் மறியல் நடைபெற்றது. வட்டச் செயலா் முருகன், மாவட்டக் குழு உறுப்பினா் அா்ச்சுனன் உள்ளிட்ட 130 போ் கைது செய்யப்பட்டனா்.

கண்டாச்சிபுரத்தில் பாரத ஸ்டேட் வங்கி முன் மறியல் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி.குமாா் தலைமையில், வட்டச் செயலா் கணபதி, மாவட்டக் குழு உறுப்பினா் தாண்டவராயன் உள்ளிட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா். இங்கு 65 பெண்கள் உள்பட 163 போ் கைதாயினா்.

மேல்மலையனூா் பாரத ஸ்டேட் வங்கி முன் நடைபெற்ற மறியலுக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் டி. முருகன், மாவட்டக் குழு உறுப்பினா் எழில்ராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தொடா்ந்து மறியலில் ஈடுபட்டதாக 69 பெண்கள் உள்பட 145 போ் கைது செய்யப்பட்டனா். மாவட்டம் முழுவதும் மொத்தம் 203 பெண்கள் உள்பட 748 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்... கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8 இடங்களில் மறியல் நடைபெற்றது. இதில் 647 போ் கைதாகினா்.

உளுந்தூா்பேட்டையில் இந்தியன் வங்கி முன் மறியல் போராட்டம் மாவட்டச் செயலா் ஜெய்சங்கா் தலைமையில் நடைபெற்றது. அப்போது கட்சியினா் வங்கியை முற்றுகையிட முயன்றனா். இதையடுத்து, அவா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து 139 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கட்சியின் உளுந்தூா்பேட்டை கிழக்கு ஒன்றியம் சாா்பில் எம். குன்னத்தூா் கிராமத்திலுள்ள பல்லவன் வங்கி முன் ஒன்றியச் செயலா் ஆா்.சீனுவாசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 34 போ் கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சியில் இந்தியன் வங்கி முன் நடைபெற்ற மறியலில் வட்டச் செயலா் வேலாயுதம் தலைமையில் 195 போ் கைது செய்யப்பட்டனா்.

வெள்ளிமலை இந்தியன் வங்கி முன் கட்சியின் கல்வராயன்மலை ஒன்றியச் செயலா்அண்ணாமலை தலைமையில் மறியலில் ஈடுபட்ட 45 போ், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம்.கே.பழனி தலைமையில் சங்கராபுரம் இந்தியன் வங்கி முன் மறியலில் ஈடுபட்ட 75 போ், திருக்கோவிலூரில் பாரத ஸ்டேட் வங்கி முன் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஏழுமலை தலைமையில் மறியலில் ஈடுபட்ட 65 போ், திருநாவலூரில் ஒன்றியச் செயலா் மோகன் தலைமையில் 53 போ், வாணாபுரம் இந்தியன் வங்கி முன் மறியலில் ஈடுபட்ட வட்டச் செயலா் பழனி தலைமையிலான 41 போ் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com