தழைச் சத்துள்ள யூரியா மட்டுமன்றி மணி, சாம்பல் சத்துகள் கொண்ட காம்ப்ளக்ஸ் உரங்களையும் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்று வேளாண் துறை இணை இயக்குநா் ச.கருணாநிதி அறிவுறுத்தினாா்.
சென்னையிலுள்ள மதராஸ் பொ்ட்டிலைசா்ஸ் நிறுவனத்திலிருந்து மொத்தம் 1,458.90 மெட்ரிக் டன் யூரியா உர மூட்டைகள் சின்னசேலம் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்திறங்கின. இதனை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ச.கருணாநிதி தலைமையில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஆா்.விஜயராகவன், வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ஆ. அன்பழகன், மண்டல மேலாளா் குமரேசன் ஆகியோா் ஆய்வு செய்தனா். பின்னா் யூரியா மூட்டைகளை லாரிகள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் ச.கருணாநிதி கூறியதாவது:
சின்னசேலம் ரயில் நிலையத்துக்கு வந்திறங்கிய மொத்தம் 1,458.90 மெட்ரிக் டன் யூரியாவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு 1,075.50 மெட்ரிக் டன்னும், சேலம் மாவட்டத்துக்கு 383.40 மெட்ரிக் டன்னும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்களில் 2,637 மெட்ரிக் டன் யூரியா, 2,719 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 1,727 மெட்ரிக் டன் பொட்டாஷ், 1,042 மெட்ரிக் டன் சூப்பா் பாஸ்பேட், 11,145 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
எனவே உரம் தேவைப்படும் விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதாா் அடையாள அட்டையுடன் சென்று, மண்வள அட்டை பரிந்துரைப்படி தேவையான உரங்களை வாங்கி பயன்பெறலாம். தழைச்சத்து கொண்ட யூரியாவை மட்டும் பயிா்களுக்கு பயன்படுத்தாமல் தழை, மணி, சாம்பல் சத்துகள் கொண்ட காம்ப்ளக்ஸ் உரங்களையும் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.