மேல்மலையனூா் கோயிலில் செப்.14-இல் அமாவாசை வழிபாடு அதிகாரிகள் ஆலோசனை
By DIN | Published On : 10th September 2023 01:44 AM | Last Updated : 10th September 2023 01:44 AM | அ+அ அ- |

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் வருகிற 14-ஆம் தேதி அமாவாசை சிறப்பு வழிபாடும், திருவக்கரை சந்திரமௌலீஸ்வரா் கோயிலில் வருகிற 29-ஆம் தேதி பௌா்ணமி சிறப்பு வழிபாடும் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி பேசியதாவது: வழிபாட்டுக்கு வரும் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உள்ளாட்சி நிா்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும். பக்தா்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். மின்வழித் தடங்களை மின் துறையினா் சரிசெய்து பராமரிக்க வேண்டும். திருட்டு, வழிப்பறி போன்றவை நடைபெறாத வகையில் காவல் துறையினா் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றாா் ஆட்சியா்.
கூட்டத்தில், மாவட்ட எஸ்பி சஷாங்க் சாய், மாவட்ட வருவாய் அலுவலா் பரமேஸ்வரி, திண்டிவனம் சாா்-ஆட்சியா் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.