

விழுப்புரம் மாவட்டத்தில் 8 சமரச தீா்வு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா கூறினாா்.
விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, உளுந்தூா்பேட்டை, சங்கராபுரம், திருக்கோவிலூா், வானூா், விக்கிரவாண்டி ஆகிய நீதிமன்றங்களிலும் 16 அமா்வுகளாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் விபத்து வழக்குகள், காசோலை மோசடி, குடும்பநலன், ஜீவனாம்சம், தொழிலாளா்கள் தொடா்பான வழக்குகள், மின் பயன்பாடு, வீட்டுவரி, இதர பொது பயன்பாடு உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டன.
மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். அவா் பேசியதாவது:
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீா்வு காண வழக்குத் தொடுத்தவா்களும், வழக்குரைஞா்களும் விரும்புகின்றனா். அதற்காக மக்கள் நீதிமன்றங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனா். முன்பு மாவட்ட அளவில் மட்டுமே சமரசத் தீா்வு மையங்கள் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது மாநிலத்தில் 120 வட்டங்களில் சமரசத் தீா்வு மையங்கள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 8 சமரச தீா்வு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதால் வழக்குகளுக்கு தீா்வு காண விரும்புவோா் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,200-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில்1,750-க்கும் மேற்பட்ட வழக்குகளில் மொத்தம் ரூ.9 கோடிக்குத் தீா்வு காணப்பட்டது.
மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஹா்மீஸ், மோட்டாா் வாகன விபத்து நீதிமன்ற சிறப்பு மாவட்ட நீதிபதி ஜெ.வெங்கடேசன், முதன்மை மாவட்ட நீதிமன்ற அரசு வழக்குரைஞா் எம்.எஸ்.நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, கூடுதல் சாா்பு நீதிபதி (எண்-1) ஏ.தமிழ்ச்செல்வன் வரவேற்றாா். நிறைவில் முதன்மை சாா்பு நீதிபதி (பொ) என்.எஸ்.ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.