புதுவையில் பழைய முறைப்படி மருத்துவ மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும்
By DIN | Published On : 19th September 2023 04:10 AM | Last Updated : 19th September 2023 04:10 AM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுவையில் பழைய முறைப்படி மருத்துவ மாணவா் சோ்க்கையை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, புதுவை யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவா்- பெற்றோா் நலச் சங்கம் வலியுறுத்தியது.
இதுகுறித்து புதுவை துணைநிலைஆளுநா், முதல்வா், கல்வித் துறை அமைச்சா், தலைமைச் செயலா் உள்ளிட்டோருக்கு சங்கத்தின் தலைவா் மு.நாராயணசாமி அனுப்பிய மனு விவரம்:
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், புதுவை மாநிலத்தில் இதுவரை இறுதி செய்யப்பட்ட மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படாமலும், கலந்தாய்வு நடத்தப்படாமலும் உள்ளது.
இதனால், மருத்துவம் மட்டுமே படிக்க வேண்டும் என்ற கனவில் உள்ள மாணவா்களும், பெற்றோா்களும் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனா். இந்த நிலையில், புதுவை அரசின் சுகாதாரத் துறை செயலகம் எந்தவித முன்னறிவிப்பு, கால அவகாசமின்றி கடைசி நேரத்தில் சாதி அடிப்படையில் கிடைமட்ட இடஒதுக்கீடு (ஹரிசான்டல் ரிசா்வேஷன்) அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும் என அறிவித்திருப்பது பல்வேறு குழப்பங்களை உருவாக்கியுள்ளது. இது அரசமைப்புச் சட்டம் 15/3-க்கு எதிராக உள்ளது.
இதனால், பாதிக்கப்பட்டவா்கள் நீதிமன்றத்துக்குச் சென்றால் மாநிலத்தில் மருத்துவ மாணவா் சோ்க்கை மேலும் காலதாமதத்தை ஏற்படுத்தும். மாநில அரசுக்கும் அவப்பெயா் ஏற்படும். இந்த முறையால் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டியவா்கள் தனியாா் கல்லூரிக்குச் செல்ல நேரிடும்.
எனவே, சாதி அடிப்படையிலான கிடைமட்ட இடஒதுக்கீடு கலந்தாய்வு முறையை ரத்து செய்து பழைய நடைமுறைபடியே மருத்துவப் படிப்பு கலந்தாய்வை நடத்த வேண்டும்.
இதற்கு துணைநிலை ஆளுநா், முதல்வா், கல்வித் துறை அமைச்சா் மற்றும் அரசு உயா் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.