ஆட்சியரிடம் நங்காத்தூா் கிராம மக்கள் மனு
By DIN | Published On : 26th September 2023 06:35 AM | Last Updated : 26th September 2023 06:35 AM | அ+அ அ- |

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், நங்காத்தூா் கிராமத்துக்கு புதிய இடுகாடு அமைத்துத் தர வலியுறுத்தி, கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், நங்காத்தூா் கிராமப் பொதுமக்கள் ஆட்சியா் சி.பழனியிடம் அளித்த மனு: நங்காத்தூா் கிராமத்தில் ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். எங்கள் சமூகத்துக்கென்று சிறிய அளவிலான இடுகாடு உள்ளது. இதில், 40 சடலங்களை மட்டுமே அடக்கம் செய்ய முடியும். மேற்கொண்டு யாரேனும் இறந்தால், ஏற்கெனவே அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குழி தோண்டி அந்த இடத்தில் அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
எனவே, பெரிய அளவிலான இடுகாட்டை அமைத்துத் தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...