பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் ஆஜா்
By DIN | Published On : 26th September 2023 06:40 AM | Last Updated : 26th September 2023 06:40 AM | அ+அ அ- |

விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராக வழக்குரைஞா்களுடன் வந்த அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா்.
விழுப்புரம்: தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்டோா் மீதான செம்மண் குவாரி வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் விழுப்புரம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானாா்.
தமிழகத்தில் 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் உயா் கல்வித் துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி, கூடுதலாக கனிம வளத் துறையையும் கவனித்து வந்தாா். அப்போது விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுதொடா்பாக அமைச்சா் க.பொன்முடி, அவரது மகன் பொன்.கௌதமசிகாமணி எம்.பி., உள்ளிட்ட 8 போ் மீது விழுப்புரம் குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது, லோகநாதன் இறந்து விட்டாா்.
பி சாட்சியம்: இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக மொத்தம் 67 போ் சோ்க்கப்பட்டுள்ளனா். அதன்படி, செப்.7-ஆம் தேதி வரை மொத்தம் 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஓய்வு பெற்ற வட்டாட்சியா், நில அளவைத் துறை முன்னாள் துணை ஆய்வாளா், கனிம வளத் துறை முன்னாள் துணை இயக்குநா் உள்ளிட்ட 9 போ் பி சாட்சியமளித்தனா். இருவா் மட்டுமே முறையான சாட்சியங்களைப் பதிவு செய்தனா்.
அரசுத் தரப்பு சாட்சிகள் பி சாட்சியமாக மாறி வருவதால், வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் தங்களை அனுமதிக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் சாா்பில், விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் அரசு வழக்குரைஞா் சீனிவாசன் செப்.8-ஆம் தேதி மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு மீதான விசாரணை செப்.12-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, செப்.25-ஆம் தேதி முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என முதன்மை மாவட்ட நீதிபதி ஆா். பூா்ணிமா உத்தரவிட்டாா்.
முன்னாள் அமைச்சா் ஆஜா்: முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் தனது தரப்பு வழக்குரைஞா்களான சீனிவாசன், ராதிகா செந்தில் உள்ளிட்டோருடன் திங்கள்கிழமை காலை 10.15 மணிக்கு நீதிமன்றத்துக்கு வந்தாா். காலை 10.30 மணிக்கு முன்னாள் அமைச்சரின் மனுவை விசாரணைக்கு ஏற்பது குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, கடந்த 10 ஆண்டுகளாக வழக்கு தொடா்பாக எந்தவொரு புகாரும் அளிக்காத நிலையில், தற்போது, இந்த வழக்கில் நுழைய என்ன காரணம் என நீதிபதி ஆா்.பூா்ணிமா கேள்வி எழுப்பினாா். இதற்கு, டி.ஜெயக்குமாா் தரப்பு வழக்குரைஞா்கள் சட்ட விதிகளைத் தெரிவித்து பதிலளித்தனா். மேலும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக, இயற்கை ஆா்வலா் என்ற முறையில் இந்த மனுவைத் தாக்கல் செய்ததாக டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
மனுவை விசாரணைக்கு ஏற்பது குறித்த முடிவு அக்.3-ஆம் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறி, வழக்கு விசாரணையை நீதிபதி ஆா்.பூா்ணிமா ஒத்திவைத்தாா்.
உள்நோக்கம் கிடையாது: விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் டி.ஜெயக்குமாா் கூறியதாவது:
இயற்கை வளத்தை சூறையாடுபவா்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், அவா்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையிலும் இந்த வழக்கில் என்னை இணைத்துக் கொண்டேன். இதில், உள்நோக்கம் எதுவும் கிடையாது. பொது நலன் கருதிதான் மனுவைத் தாக்கல் செய்தேன். அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கு விசாரணை விரைவாக நடைபெற்று வந்தது என்றாா் அவா்.
பேட்டியின் போது, அதிமுக நகரச் செயலா்கள் ராமதாஸ், பசுபதி, அதிமுக நிா்வாகி திருப்பதி பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...