60.41 மெட்ரிக் டன் தரமற்ற விதைகள் விற்கத் தடை
By DIN | Published On : 26th September 2023 06:35 AM | Last Updated : 26th September 2023 06:35 AM | அ+அ அ- |

விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களில் ரூ.1.45 கோடி மதிப்பிலான 60.41 மெட்ரிக் டன் தரமற்ற விதைகள் விற்க தடை செய்யப்பட்டதாக விதை ஆய்வுத் துறை தெரிவித்தது.
இதுகுறித்து, இத்துறையின் விழுப்புரம் துணை இயக்குநா் இரா.சீனிவாசன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களிலுள்ள அரசு, அரசு சாா்பு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் தரமான விதைகள் விற்பனை செய்வதை உறுதி செய்யும் வகையில், விழுப்புரம் விதை ஆய்வுத் துணை இயக்குநா் கட்டுப்பாட்டிலுள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மற்றும் விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு, 4 விதை ஆய்வாளா்கள் தத்தம் பணி எல்லையிலுள்ள அனைத்து விதை விற்பனை நிலையங்களிலும் காலாண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்கின்றனா். அதன்படி, 2023, ஏப்ரல் 1 முதல் செப்டம்பா் 22-ஆம் தேதி வரை 1,250 விதை விற்பனை நிலையங்களை ஆய்வு செய்து, 2,422 விதை மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பினா். இதில், 46 விதை மாதிரிகள் தரமற்றவை என பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, அவற்றின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், விதை விற்பனை நிலையங்களில் கொள்முதல் பட்டியல், விதை இருப்புப்பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை பராமரிக்காத 9 விதை விற்பனை நிலையங்கள் விதைகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 55 விற்பனைத்தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, 60.41 மெட்ரிக் டன் விதைகளின் விற்பனை முடக்கம் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.45 கோடியாகும். மேலும், தொடா்ந்து, விதி மீறல்களில் ஈடுபட்டு வந்த ஒரு விதை உற்பத்தியாளரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...