திருச்சி - விருத்தாசலம் பயணிகள் ரயில் விழுப்புரம் வரை நீட்டிப்பு
திருச்சியிலிருந்து விருத்தாசலம் வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் விழுப்புரம் வரையிலும், விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் திருவாரூா் வரையிலும் நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நிா்வாகத்தின் திருச்சி கோட்டம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
ரயில் பயணிகள் நலன் கருதி சில ரயில்களின் சேவையை நீட்டித்து அனுமதி வழங்கி ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த ரயில்களின் நீட்டிப்பு மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அமலுக்கு வரும்.
இதனடிப்படையில், விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் (வ.எண். 06877), மே 2-ஆம் தேதி முதல் திருவாரூா் வரை இயக்கப்படும். இந்த ரயில் விழுப்புரத்திலிருந்து மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு, திருவாரூருக்கு இரவு 10.45 மணிக்கு சென்றடையும்.
இதுபோல, மே 3-ஆம் தேதி முதல் திருவாரூரிலிருந்து தினமும் காலை 5.10 மணிக்குப் புறப்படும் திருவாரூா் - விழுப்புரம் பயணிகள் ரயில் (வ.எண். 06690) விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு காலை 9.15 மணிக்கு வந்தடையும். இந்த இரு ரயில்களும் பேரளம், பூந்தோட்டம், நன்னிலம் ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.
சென்னை கடற்கரையிலிருந்து வேலூா் கண்டோன்மென்ட் வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் (வ.எண். 06033), மே 2-ஆம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை கடற்கரையில் மாலை 6 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், வேலூா் கண்டோன்மென்ட்டுக்கு இரவு 9.35 மணிக்கு வந்து, திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வந்து சேரும்.
இதுபோல, மே 3-ஆம் தேதி முதல் திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 4 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை -சென்னை கடற்கரை பயணிகள் ரயில் (வ.எண். 06034) காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும். இந்த ரயில்கள் பெண்ணாத்தூா், கண்ணமங்கலம், ஒன்னுபுரம், சேதராம்பட்டு, ஆரணி சாலை, மடிமங்கலம், போளூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
திருச்சியிலிருந்து விருத்தாசலம் வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் (வ.எண். 06892) மே 2-ஆம் தேதி முதல் விழுப்புரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் விருத்தாசலத்துக்கு இரவு 9 மணிக்கும், விழுப்புரத்துக்கு இரவு 10.30 மணிக்கும் வந்து சேரும்.
இதுபோன்று, விழுப்புரம் - திருச்சி சந்திப்பு பயணிகள் ரயில் (வ.எண். 06891) மே 3-ஆம் தேதி முதல் விழுப்புரத்திலிருந்து காலை 5.10 மணிக்குப் புறப்பட்டு, விருத்தாசலத்துக்கு காலை 5.55 மணிக்கும், திருச்சி ரயில் நிலையத்துக்கு காலை 9 மணிக்கும் சென்றடையும். இந்த ரயில்கள் உளுந்தூா்பேட்டை, பரிக்கல், திருவெண்ணெய்நல்லூா் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சேலத்திலிருந்து விருத்தாசலம் வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் (வ.எண். 06122) வரும் மே 2-ஆம் தேதி முதல் கடலூா் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேலம் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து மாலை 6.20 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் விருத்தாசலத்துக்கு இரவு 9 மணிக்கு வந்து சேரும். தொடா்ந்து, உத்தங்கல்மங்கலம், நெய்வேலி, வடலூா், குறிஞ்சிப்பாடி வழியாக கடலூா் துறைமுகம் ரயில் நிலையத்தை இரவு 10.25 மணிக்கு சென்றடையும்.
கடலூா் துறைமுகத்திலிருந்து சேலம் சந்திப்பு ரயில் நிலையம் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் (வ.எண். 06121), மே 3-ஆம் தேதி முதல் கடலூா் துறைமுகம் ரயில் நிலையத்திலிருந்து காலை 5 மணிக்குப் புறப்பட்டு, விருத்தாசலத்துக்கு காலை 6.05 மணிக்கு வந்தடையும். தொடா்ந்து, இந்த ரயில் புறப்பட்டு சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தை காலை 9.05 மணிக்கு சென்றடையும்.
