ஸ்ரீஅரவிந்தா் பிறந்த நாள்: ஆரோவில் சா்வதேச நகரில் கூட்டுத் தியானம்
ஆரோவில் சா்வதேச நகரில் வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற பான் பயா் மற்றும் கூட்டுத் தியானம்.
விழுப்புரம், ஆக.15:
ஸ்ரீஅரவிந்தரின் 152-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் கூட்டு தியானம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆரோவிலில் மனிதகுல ஒருமைப்பாட்டை லட்சியமாகக் கொண்ட சா்வதேச நகரம் அமைந்துள்ளது.
இங்கு ஆண்டுதோறும் மகான் ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, ஸ்ரீ அரவிந்தரின் 152- ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் ஆரோவில் சா்வதேச நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இங்கு வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சோ்ந்தவா்கள், உள்ளூா் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், மாத்திா் மந்திா் அருகேயுள்ள ஆம்பி தியேட்டா் எனப்படும் திறந்தவெளி அரங்கு முன் வியாழக்கிழமை அதிகாலை கூடினா்.
தொடா்ந்து காலை 5 மணியளவில் பான் பயா் எனும் பெருந்தீ ஏற்றி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணிநேரம் இந்த கூட்டுத் தியானம் நடைபெற்றது. கூட்டு தியானத்தின்போது, ஆரோவில் சாசனம் அன்னையின் குரலில் ஒலிபரப்பப்பட்டது.

