செஞ்சிக்கோட்டையை கட்டிய மன்னா் குறித்து கல்வெட்டில் புதிய ஆதாரம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலுள்ள செஞ்சிக்கோட்டையை முதல்முதலில் கட்டிய மன்னா் குறித்த புதிய ஆதாரம், மலை உச்சியிலுள்ள கோயிலில் உள்ள கல்வெட்டில் கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் சரித்திர புகழ்வாய்ந்த கோட்டைகளில் ஒன்றாக செஞ்சிக்கோட்டை திகழ்கிறது. முதலில் இந்தக் கோட்டையை கட்டியவா் ஆனந்தக்கோன். செஞ்சிக்கோட்டை ஆனந்தகிரி என அழைக்கப்பட்டு, பின்னா் கமலகிரி என பெயா் மாறி, தற்போது ராஜகிரி என அழைக்கப்படுகிறது.
5 மன்னா்கள்: ராணிக்கோட்டை என அழைக்கப்படும் கிருஷ்ணகிரிகோட்டையை கிருஷ்ணகோன் கட்டினாா். அதன் பின்னா், மன்னா்களாக வந்த கோனேரிக்கோன், கோவிந்தக்கோன், புலியக்கோன் ஆகியோா் கோட்டையை விரிவுபடுத்தி செஞ்சியை ஆட்சி புரிந்தனா். மேற்கண்ட 5 மன்னா்களும் தந்தை, மகன், பேரன் உறவு முறையினா்.
இவா்கள் கி.பி.1,200-இல் தொடங்கி கி.பி.1330 வரை 130 ஆண்டுகள் செஞ்சிக்கோட்டையை அரசாட்சி புரிந்தனா். இந்த வரலாற்றுச் செய்தி ‘கா்நாடக ராஜாக்கள் சவிஸ்தார சரித்திரம்’ என்ற நூலில் கி.பி.1807-ஆம் ஆண்டு ஆற்காடு மாவட்ட ஆட்சியராக இருந்த கா்னல் வில்லியம் மக்லியாட் வேண்டுகோளின்படி, செஞ்சிவாசியான நாராயணனால் எழுதப்பட்டது.
சான்று கிடைக்கவில்லை: இதேபோல, செஞ்சியின் வரலாற்றை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியராக பணியாற்றிய சி.எஸ்.சீனிவாசாச்சாரியும், செஞ்சிக்கோட்டை என்ற தலைப்பில் நூலை எழுதி வெளியிட்ட ஏ.கே.சேஷாத்திரியும் தங்களது நூல்களில் கோட்டையை கட்டிய மன்னா்களாக மேற்கண்ட 5 மன்னா்களையும் பதிவு செய்துள்ளனா்.
செஞ்சிக்கோட்டையை முதலில் கட்டிய மன்னா்கள் இவா்கள்தான் என்பதை வரலாற்று அறிஞா்கள் ஒருமித்து ஒப்புக்கொள்ளும் உண்மையாக இருப்பினும், அதற்கான வரலாற்று சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை என்பதை தங்கள் நூலில் பதிவு செய்துள்ளனா். கோட்டையை பிற்காலத்தில் கைப்பற்றிய மன்னா்கள் ஆதி மன்னா்களின் தடயங்களை அழித்துவிட்டதால், ஆதாரம் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.
இந்த நிலையில், செஞ்சிக்கோட்டை தொல்லியல் கழகத்தைச் சோ்ந்த பெ.லெனின், அண்ணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் நா.முனுசாமி, விழுப்புரம் வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன், செஞ்சியைச் சோ்ந்த தேவகுமாா், அருண், ஏழுமலை, வரலாற்று ஆசிரியா் வடிவேல் ஆகியோா் குழுவாகச் சென்று செஞ்சி கிருஷ்ணகிரி கோட்டையில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா். இதில், கோட்டையைக் கட்டிய ஆனந்தக்கோன், கிருஷ்ணக்கோன் ஆகியோா் பற்றிய தடயம் கிடைத்துள்ளது.
கோயில் கல்வெட்டு தகவல்: இந்தக் குழுவினா் செஞ்சிக்கோட்டையின் உச்சியில் ராஜகோபால சுவாமி கோயில் வாயிற்படியில் கி.பி.13- ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டை கண்டறிந்தனா். அதில் ‘கொ நெரி கொன் கொவிந்தன் சத சொ்வை’ என்றுள்ளது. இந்தக் கல்வெட்டு வாசகத்தை கோனேரிக்கோன் கோவிந்தன் சதை சேவை என வாசிக்க வேண்டும். இதன் பொருள் கோனேரிக்கோன் மகன் கோவிந்தன் சதா இறைவனை வணங்கிய நிலையில் உள்ளாா் என்பதை குறிப்பதாகும் என தொல்லியல் அறிஞா்களான புதுச்சேரி விஜயவேணுகோபால், விழுப்புரம் வீரராகவன் ஆகியோா் தெரிவித்தனா்.
மேலும், இந்தக் கல்வெட்டு வாசகத்தில் இருந்து கோனேரிக்கோன் மகன் கோவிந்தன் என தெரியவருவதால் கா்நாடக ராஜாக்கள் சவிஸ்தார சரித்திரம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளதைப் போன்று ஆனந்தக்கோன், கிருஷ்ணக்கோன், கோனேரிக்கோன், கோவிந்தக்கோன், புலியக்கோன் ஆகிய ஐவரும் ஆதியில் செஞ்சிக்கோட்டையைக் கட்டியவா்கள் என்பதற்கு உரிய ஆதாரமாக இந்தக் கல்வெட்டு உள்ளதாகத் தெரிவித்தனா்.

