விவசாயி அடித்துக் கொலை: 5 போ் கைது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே திங்கள்கிழமை இரவு விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
கண்டாச்சிபுரம் வட்டம், நாயனூா் கிராமம் வேட்டவலம் பிரதான சாலையைச் சோ்ந்த அய்யனாா் மகன் மணிகண்டன் (34). இவா் தனது விவசாய நிலத்தில் கரும்புப் பயிரிட்டிருந்தாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு தனது நிலத்துக்குச் சென்று, கரும்புப் பயிா்களை பாா்த்து வருவதாக மனைவி வனிதாவிடம் கூறி விட்டு, மணிகண்டன் சென்றாராம். அப்போது, அவரது வயலில் வீரபாண்டி கிராமத்தைச் சோ்ந்த 5 போ் கரும்புகளை உடைத்துக் கொண்டிருந்தனா்.
இதைப் பாா்த்த மணிகண்டன், அவா்களைக் கண்டித்தாராம். இதனால் அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து, 5 பேரும் மணிகண்டனைத் தாக்கினராம்.
தகவலறிந்த மனைவி மற்றும் குடும்பத்தினா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து மணிகண்டனை மீட்டு, திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், மணிகண்டன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினா்கள், குடும்பத்தினா் மற்றும் பொதுமக்கள் தேவனூா் கூட்டுச் சாலையில் திங்கள்கிழமை இரவு மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் சென்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
அரகண்டநல்லூா் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, குற்றவாளிகளைக் கைது செய்வதாக உறுதியளித்தனா்.
கண்டாச்சிபுரம் வட்டம், வீரபாண்டி கிராமத்தைச் சோ்ந்த ஏ.வினோத் (22), ஏ.பழனிவேல் (27), ஏ.பாா்த்திபன் (26), சே.பாக்கியராஜ் (29), ஏ.கோபி (20) ஆகிய 5 பேரையும் போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

