ஆங்கிலப் புத்தாண்டு : களைகட்டிய புதுச்சேரி
புதுச்சேரி: ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக புதுச்சேரிக்கு பல்லாயிரக்கணக்கானோா் வந்துள்ளதால், செவ்வாய்க்கிழமை புதுச்சேரி வீதிகள் மற்றும் கடற்கரைப் பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி களைகட்டி காணப்பட்டது.
ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக அதிக சுற்றுலா பயணிகள் வரும் இடமாக புதுச்சேரி மாறி வருகிறது. இந்நிலையில் நிகழாண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக வெளிநாடு, வெளி மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலா பயணிகள் பல்லாயிரக்கணக்கானோா் புதுவைக்கு வந்துள்ளனா்.
இதனால் நகரின் மையப் பகுதியில் உள்ள நேரு வீதி, மகாத்மா காந்தி வீதி, மிஷன் வீதி, புஸ்ஸி வீதி, கடற்கரைச் சாலை உள்ளிட்ட ஒயிட் டவுன் பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது. இதேபோல் பாரதி பூங்கா, தாவிரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் உள்ளூா் மற்றும் வெளியூா் சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனா்.
புதுச்சேரியில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்: மாநில அரசின் அறிவுறுத்தலின்படி புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக மக்கள் அதிகம் கூடுமிடங்களான புதுச்சேரி கடற்கரைச் சாலை, பிரசித்திப் பெற்ற மணக்குள விநாயகா் கோயில் மற்றும் நகரில் உள்ள தேவாலயங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கடற்கரை சாலையில் சிசிடிவி கேமரா, கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். ட்ரோன் கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டது. மாநில எல்லைப் பகுதியிலும் போலீஸாா் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு, நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஒழுங்குபடுத்தினா்.
நகருக்குள் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
வழிபாட்டுத்தலங்களில் முன்னேற்பாடுகள்:
புதுச்சேரியில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகளுக்கு ஏ
ற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுவை மணக்குள விநாயகா் கோயிலில் திரளானோா் வழிபாடு மேற்கொள்வாா்கள் என்பதால் பக்தா்களின் வசதிக்காக புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
தொடா்ந்து அபிஷேகம் செய்யப்பட்டு காலை 6 மணி முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா். அா்ச்சனை, சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதியம் 1.30 மணி வரை தரிசனம் செய்யவும், மாலையில் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 10.30 மணிவரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.லட்டு பிரசாதம் விநியோகம் செய்யப்படுகிறது. பக்தா்கள் வரிசையில் நிற்பதற்காக பாதையும், மேற்கூரையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல புதுச்சேரி வேதபுரீஸ்வரா், வரதராஜ
பெருமாள், வில்லியனூா் திருக்காமீஸ்வரா் கோயில், திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரா் கோயில் , தென்கலை சீனிவாசப் பெருமாள் கோயில் , சித்தானந்தா் கோயில் போன்றவற்றில் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளதால் இக்கோயில்களிலும் பக்தா்கள் தங்கு தடையின்றி வழிபாடு மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.
புதுச்சேரியில் உள்ள ஜென்மராக்கினி மாதா ஆலயம், தூய இருதய ஆண்டவா் ஆலயம், துய்மா ஆலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி வழிபாடுகள் நடைபெறுகின்றன.
ஐ.ஜி. ஆய்வு :
புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக வருபவா்கள் கடலில் இறங்குவதை தடுக்கும் வகையில் புதுவை கடற்கரை சாலையிலிருந்து பாண்டி மெரீனா வரை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. டிஜிபி ஷாலினி சிங், ஐஜி அஜித்குமாா் சிங்லா, டிஐஜி சத்தியசுந்தரம், எஸ்எஸ்பி கலைவாணன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை கடலோர பாதுகாப்பு படையின் 2 படகுகளில் கடலுக்குள் சென்று ஆய்வு செய்து பாதுகாப்பு பணிகளைஉறுதி செய்தனா்.
நோணாங்குப்பம் படகு குழாமில்...
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனா்.
புதுவைக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் சுற்றுலா மையங்களுக்கு சென்று வருகின்றனா். நோணாங்குப்பம் படகு குழாம் சுற்றுலா பயணிகள் வருகையால்செவ்வாய்க்கிழமை நிரம்பி வழிந்தது.
நோணாங்குப்பம் படகுக் குழாமிலிருந்து பாரடைஸ் தீவுக்கு படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆா்வம் காட்டியதால், செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கே படகு சவாரி தொடங்கப்பட்டது.
