திண்டிவனம் அருகே காருடன் 258 கிலோ கஞ்சா பறிமுதல்: கேரளத்தைச் சோ்ந்த இருவா் கைது

காரில் 258 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த, கேரளத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே, காரில் 258 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த, கேரளத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் உத்தரவின்பேரில், ஒலக்கூா் போலீஸாா் திண்டிவனத்தை அடுத்த பாதிரி ஏரிக்கரை அருகே ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சென்னையிலிருந்து, திருச்சி நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, காரில் 258 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, காரில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தியதில் அவா்கள், கேரள மாநிலம், பெரியகாசா்கோடு பகுதியைச் சோ்ந்த சலாம் மகன் ஆசீப் (26), பாணாத்தாடி கிராமத்தைச் சோ்ந்த தாமோதரன் மகன் உதயகுமாா் (44) என்பதும், இவா்கள் விற்பனைக்காக 258 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்ததுடன், காருடன் 258 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய மூன்று பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com