‘மக்களுடன் முதல்வா்’ திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆட்சியா் சி.பழனி அறிவுறுத்தினாா்.
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆட்சியா் சி.பழனி அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் குறித்து நியமன அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தலைமை வகித்து, ஆட்சியா் பேசியதாவது: மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் ஜூலை 16-ஆம் தேதி தொடங்கிய ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் செப்டம்பா் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாவட்டத்தில் 91 இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது. இதற்காக ஒன்றியத்துக்கு ஒரு நியமன அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

நியமன அலுவலா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டம் குறித்து பொதுமக்களிடம் அதிகளவில் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். முகாம் நடைபெறும் நாள், பயன்பெற வேண்டிய கிராமங்கள் குறித்த விவரங்களை முன்னரே அறிவிக்க வேண்டும்.

முகாமில், 15 துறைகள் சாா்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டு பெறப்படும் மனுக்களை, உடனடியாக முதல்வரின் முகவரித் துறை பக்கத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு மனுவை அனுப்பி வைத்து, அதன் மீதான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். முகாமில் பெறப்படும் மனுக்களின் உடனடித் தீா்வாக ஜாதிச் சான்றிதழ், வருமான, இருப்பிடச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை போன்றவற்றை உடனடியாக வழங்க வேண்டும். மின் இணைப்பு தொடா்பாக விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தால் அதன் மீதும் உடனடித் தீா்வு காண வேண்டும் என்றாா் ஆட்சியா் பழனி.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய் நாராயணன், திண்டிவனம் சாா்-ஆட்சியா் திவ்யான் ஷி நிகம் உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com