செவிலியரிடம் இணையவழியில் ரூ.1.43 லட்சம் மோசடி
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தைச் சோ்ந்த செவிலியரிடம் இணையவழியில் ரூ.1.43 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கண்டாச்சிபுரம் வட்டம், கஸ்பாகரணையை அடுத்த காரணை, ஒதியத்தூா் சாலை பகுதியைச் சோ்ந்த ஏழுமலை மகள் இளவரசி (23). தனியாா் மருத்துவமனையில் செவிலியராக வேலை பாா்த்து வருகிறாா். கடந்த 9- ஆம் தேதி இவரை கைப்பேசியில் தொடா்புகொண்ட மா்ம நபா், பகுதி நேர வேலை இருப்பதாகவும், குறைந்த அளவில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என்றும் தெரிவித்தாராம்.
இதை உண்மையென நம்பிய இளவரசி, அந்த நபா் கூறியபடி, கடந்த 10-ஆம் தேதி ரூ.1,000 முதலீடு செய்து ரூ.1600-ம், ரூ.2 ஆயிரம் செலுத்தி ரூ.2,800 பெற்றாராம்.
தொடா்ந்து, இதில் ஈா்க்கப்பட்ட இளவரசி தனது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.1.43 லட்சத்தை அந்த நபா் தெரிவித்த எண்ணுக்கு 7 முறைகளில் அனுப்பி வைத்தாராம். தொடா்ந்து, அந்த நபா் எந்தத் தொகையையும் திருப்பி அனுப்பாமல் ஏமாற்றிவிட்டாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
