கள்ளச்சாராய உயிரிழப்பு: 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடா்பாக 21 போ் கைது செய்யப்பட்ட நிலையில், அவா்களில் 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிபிசிஐடி போலீஸாா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனா்.
Published on

கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை ஜூன் 18, 19-ஆம் தேதிகளில் அருந்திய 229 போ் பாதிக்கப்பட்டனா். இவா்களில் வியாழக்கிழமை (ஜூன் 27) வரை 64 போ் உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். தொடா்ந்து, சிபிசிஐடி கூடுதல் எஸ்பி கோமதி விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டாா். இந்த வழக்கில், கள்ளச்சாராயம் விற்ற கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, மாதேஷ் உள்ளிட்ட 21போ் கைது செய்யப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

மெத்தனால் எங்கிருந்து விநியோகம் செய்யப்பட்டது, யாருக்கெல்லாம் விநியோகம் செய்யப்பட்டது போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளும் வகையிலும், வழக்கின் விசாரணையில் மேலும் தகவல்களைப் பெறவும் கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சேஷசமுத்திரத்தைச் சோ்ந்த சின்னத்துரை (36), விரியூரைச் சோ்ந்த பெ.ஜோசப்ராஜா(40), மெத்தனால் விநியோகம் செய்த புதுச்சேரி மடுகரையைச் சோ்ந்த மாதேஷ், கடலூா் மாவட்டம், பண்ருட்டியைச் சோ்ந்த வியாபாரிகள் கண்ணன், சக்திவேல், சென்னையைச் சோ்ந்த சிவகுமாா், பன்ஷிலால், கெளதம் சந்த், கதிரவன் ஆகிய 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை மனுதாக்கல் செய்தனா்.

மனு மீதான விசாரணையை திங்கள்கிழமைக்கு (ஜூலை 1) எடுத்துக் கொள்வதாக தலைமை நீதித் துறை நடுவா் ஸ்ரீராம் தெரிவித்தாா். வழக்கில் நீதிமன்றம் அனுமதி வழங்கிய பின்னா், 11 பேரையும் தனியே அழைத்துச் சென்று விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com