சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு விசாரணை நவ.25-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து,
Published on

விழுப்புரம்: அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் 2023, ஜூலை 20-ஆம் தேதி அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் தமிழக அரசையும், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞா் சுப்பிரமணியம் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கு மீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் ஆஜராகவில்லை. அவரது சாா்பில் அதிமுக வழக்குரைஞா்கள் ராதிகா செந்தில், தமிழரசன் ஆகியோா் ஆஜராகி, சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜராகாததற்கான காரணம் குறித்து மனு தாக்கல் செய்தனா்.

மேலும், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் ஆஜராகுவதிலிருந்து விலக்களித்து, சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, அதற்கான மனுவைத் தாக்கல் செய்தனா். இதையடுத்து, இந்த வழக்கின் மீதான விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி (பொ) ஏ.பாக்கியஜோதி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com