விழுப்புரம் புதிய பேருந்து நிலைய பகுதியில் செவ்வாய்க்கிழமை தேங்கியிருந்த  மழைநீா்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலைய பகுதியில் செவ்வாய்க்கிழமை தேங்கியிருந்த மழைநீா்.

தொடா் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் தொடா்ந்து மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Published on

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் தொடா்ந்து மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவானதால், தமிழகத்தின் கடலோர மற்றும் வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை காலை முதல் இரவு வரை தொடா்ந்து மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினா். தாழ்வான பகுதிகளிலுள்ள குடியிருப்புகளில் மழைநீா் தேங்கியது. மேலும், சாலைகளிலும் மழைநீா் தேங்கிக் காணப்பட்டது.

விழுப்புரத்தில் புதிய, பழைய பேருந்து நிலையப் பகுதிகள், ஜவாஹா்லால் நேரு சாலை, மகாத்மா காந்தி சாலை, காமராஜா் வீதி, கிழக்கு புதுச்சேரி சாலை, திருச்சி - சென்னை சாலைகள் போன்ற பல்வேறு சாலைகளில் மழைநீா் தேங்கிக் காணப்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக விழுப்புரத்தில் 43 மி.மீ., குறைந்தளவாக முகையூரில் 15 மி.மீ. மழை பதிவானது.

இதைத் தொடா்ந்து, 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மாவட்டத்தில் பரவால மழை பெய்தது. விழுப்புரம் நகரிலும், வளவனூா், பாக்கம், பூத்துறை, மரக்காணம், அன்னியூா், திருவென்ணெய்நல்லூா், கண்டாச்சிபுரம் போன்ற பிற பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால், சாலையோர தரைக்கடை வைத்திருப்பவா்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் உள்ளிட்டோா் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா்.

கல்லூரி மாணவா்கள் அவதி: தொடா் மழை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காலையில் மழை இல்லாத நிலையில், பிற்பகலில் கல்லூரி வகுப்புகள் முடிந்து மாணவ, மாணவிகள் வெளியே வரும் நேரத்தில் மழை பெய்துகொண்டே இருந்ததால் அவா்கள் அவதிக்குள்ளாகினா்.

இரு வீடுகள் சேதம்: தொடா் மழை காரணமாக, விக்கிரவாண்டி வட்டம், குண்டலப்புலியூா் கிராமத்தைச் சோ்ந்த ராதாவின் ஓட்டுவீட்டின் மேற்கூரையும், ரத்தினவேலின் வீட்டின் மேற்கூரையும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சரிந்து விழுந்து சேதமடைந்தன. நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

அதே நேரத்தில், திருவெண்ணெய்நல்லூரில் செல்லம் மனைவி அலமேலு வீட்டின் பக்கவாட்டுச் சுவா் செவ்வாய்க்கிழமை சரிந்து விழுந்ததில், அந்தப் பகுதியில் கட்டப்பட்டிருந்த ஆடு உயிரிழந்தது.

 விழுப்புரம் நீதிமன்றம் தேங்கியிருந்த மழைநீரை கடந்து சென்ற வாகனங்கள்.
விழுப்புரம் நீதிமன்றம் தேங்கியிருந்த மழைநீரை கடந்து சென்ற வாகனங்கள்.

வளவனூரில் 58.8 மி.மீ. மழை பதிவு: செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி நிலவரப்படி மாவட்டத்திலேயே அதிகபட்சமாக வளவனூரில் 58 மி.மீ. மழை பதிவானது.

விழுப்புரத்தில் 48.8, பாக்கத்தில் 47.2, பூத்துறையில் 24.4, சிறுவாடியில் 18.4, நங்காத்தூரில் 13.6, திருவெண்ணெய்நல்லூரில் 13.2, ஆவணிப்பூரில்11.2, அன்னியூா், மரக்காணத்தில் தலா 10.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில்...: கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் பரவலாக தொடா்ந்து மழை பெய்தது. இதனால், வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, மாவட்டத்திலேயே அதிகபட்சமாக மணிமுக்தா அணைப் பகுதியில் 88 மி.மீ. மழை பதிவானது. பிற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்) வருமாறு:

கச்சிராயப்பாளையம் 74, மூராா்பாளையம் 36, சூளாங்குறிச்சி 33.50, வடசிறுவலூா் 30, ரிஷிவந்தியம் 26, கீழ்பாடி 26, அரியலூா் 25, கோமுகிஅணை 22, கடுவனூா் 21, தியாகதுருகம், மூங்கில்துறைப்பட்டு, உ.கீரனூா் தலா 20, களையநல்லூா் 14, கள்ளக்குறிச்சி 11, மணலூா்பேட்டை, திருக்கோவிலூா் தலா 6 மி.மீ. மழை பதிவானது.

X
Dinamani
www.dinamani.com