சாகா் கவாச் பாதுகாப்பு ஒத்திகை: கடலோர கிராமங்களில் போலீஸாா் தொடா் கண்காணிப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கோட்டக்குப்பம் கடலோரப் பகுதிகளில் சாகா் கவாச் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. 40-க்கும் மேற்பட்ட போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
கடல் வழியாக தீவிரவாத ஊடுருவல்களைத் தடுக்கும் விதமாக, ஆண்டுதோறும் கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாரால் சாகா் கவாச் எனும் கடல் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. இதன்படி, நிகழாண்டில் புதன், வியாழக்கிழமைகளில் (செப்.4, 5) இந்திய கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாரால் இந்த ஒத்திகை நடத்தப்படுகிறது.
அதன்படி, கடலோர பாகதுகாப்பு குழும காவல் கண்காணிப்பாளா் பி.வி.விஜய காா்த்திக்ராஜா உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளா் பி.சக்தி கணேஷ் தலைமையில், கடலோர பாதுகாப்பு குழுமப் போலீஸாா், விழுப்புரம் மாவட்ட சட்டம் - ஒழுங்கு போலீஸாா் மற்றும் ஊா்க்காவல் படையினா் உள்பட 40-க்கும் மேற்பட்டோா் விழுப்புரம் மாவட்ட எல்லையான மரக்காணத்தை அடுத்துள்ள அழகன்குப்பம் முதல் ஆரோவில்லை அடுத்துள்ள தந்திராயன்குப்பம் வரை சுமாா் 28 கி.மீ. தொலைவுக்கு கடலோர கிராமங்களில் ரோந்து மற்றும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்கையும் மேற்கொண்டனா்.
இந்த ஒத்திகை வியாழக்கிழமையும் தொடா்ந்து நடைபெறவுள்ளதால், சுழற்சி முறையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என கடலோர பாதுகாப்பு குழுமப் போஸீஸாா் தெரிவித்தனா்.